(இராஜதுரை ஹஷான்)

நாட்டை பிளவடையச் செய்யாமல், அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க லங்கா சமசமாஜக் கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு என்ற வகையில் இலங்கை ஒன்றுபட்டு காணப்பட்டாலும் இனங்கள் என்ற ரீதியில் வேறுபட்டே காணப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கில் பெரும்பாலும் தமிழ் மக்களே வாழ்கின்றனர். அவர்களின் நோக்கங்களும் அரசியல் செல்வாக்கும் மாறுபட்டதாகவே காணப்படுகின்றது.

இந் நிலையில் வடக்கிழக்கில் மாகாண சபைகளில் 13 ஆவது திருத்தத்தின் அதிகாரப் பகிர்வு முழுமையாக அமுல்படுதத்தப்பட்டால் அது எதிர்காலத்தில் பாரிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினையை தோற்றுவிக்கும். 

ஆகவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டியது 1978 ஆம்  ஆண்டுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களினதும் பொறுப்பாக காணப்படுகின்றது. இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவ்விடயத்தில் அதிகமாகவே பொறுப்பு காணப்படுகின்றது. 

எனவே 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் 13 ஆவது திருத்தத்தில் புதிய விடயங்களை உட்புகுத்தி கால தேவைகளுகேட்ப மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டை பிளவடையச் செய்யாமல், அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க லங்கா சமசமாஜக் கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றார்.