பிரான்ஸுக்கும், ஆர்ஜன்டீனாவுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியை கால் இறுதியில் எதிர்கொள்ளவுள்ள அணியைத் தீர்மானிக்கும் உருகுவேக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான இரண்டாவது முன்னோடி கால் இறுதிப் போட்டி (நொக் அவுட்) இன்று இரவு நடைபெறவுள்ளது.

இப் போட்டி சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் இன்ற இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாவதற்கு முன்னர் முதலாவதாக கால் இறுதிக்கு தகுதிபெற்ற அணி எது என்பது தெரியவந்திருக்கும்.

இரண்டு அணிகளிலும் இடம்பெறும் பலர் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதால் இப் போட்டி சுவாரஸ்யம் மிக்கதாக அமையும்.

உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது சம்பியனும் இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்ததுமான உருகுவே அணியில் பிரதான வீரர்களாக லூயிஸ் சுவாரெஸ், எடின்சன் கெவானி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

ஐரோப்பிய சம்பியன்களான போர்த்தக்கல் மிகச் சிறிய வாய்ப்பையும் நிறைவேற்றும் ஆற்றல் மிக்க க்றிஸ்டியானோ ரொனால்டோவில் பெரிதும் தங்கியிருக்கின்றது.

ஸ்பெய்னுக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் ரொனால்டோ இதனை நிரூபித்திருந்தார். போர்த்துக்கலை முதல் தடவையாக உலக சம்பியானாக்குவதற்கு இது ரொனால்டோவுக்கு கடைசி சந்தர்ப்பமாகும். அடுத்த உலகக் கிண்ணத்துக்கு முன்னர் ரொனால்டோ ஓய்வு பெற்றிருப்பார்.

எனவே ரொனால்டோவைக் கட்டுப்படுத்துவதில் உருகுவே வீரர்கள் குறியாக இருப்பார்கள் என்பது திண்ணம்.

இந்த இரண்டு அணிகளும் மூன்றாவது தடவையாக சந்திக்கின்றபோதிலும் உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். 

போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலும் மற்றைய சில நாடுகளிலும் சக வீரர்களாகவும் எதிரணி வீரர்களாகவும் விளையாடும் பலர் இந்த இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதால் எத்தகைய வீயூகங்களையும் இரண்டு அணிகளும் நன்கு பரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இதன் காரணமாக உருகுவேக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான போட்டி மேலதிக நேரத்தைக் கடந்து பெனல்டி முறையில் முடிவுற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அணிகள் விபரம்

உருகுவே :  பெர்னாண்டோ முஸ்லீரா மார்ட்டின் கெசேரெஸ், ஜோஸ் மரியா ஜிமேனெஸ், டியகோ கோடின் (அணித் தலைவர்), டியகோ லக்ஸால்ட், நஹிடான் நண்டெஸ், மாட்டியாஸ் வெசினோ, லூக்கஸ் டொரெய்ரா, ரொட்றிகோ பென்டென்கோர், லூயிஸ் சுவாரெஸ், எடின்சன் கெவானி.

போர்த்துக்கல்: ருய் பெட்ரிசியோ, செட்ரிக், பெப், ஜொசே பொன்டே, ரபாயல் கிரேய்ரோ, வில்லியம், ஏட்ரியன் சில்வா, ரிக்கார்டோ குவாரெஸ்மா, ஜாஓ மரியோ, கொன்சாலோ குவெட்ஸ், க்றிஸ்டியானோ ரொனால்டோ (அணித் தலைவர்)

(என்.வீ.ஏ.)