உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இரண்டு தடவைகள் சம்பியனான ஆர்ஜன்டீனாவுக்கும் (1978, 1986) ஒரு தடவை உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த பிரான்ஸுக்கும் (1998) இடையிலான போட்டியுடன் ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டிகளின் முன்னோடி கால் இறுதி (நொக் அவுட்) சுற்று இன்று இரவு ஆரம்பமாகின்றது.

இப் போட்டி கஸான் எரினா விளையாட்டரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இம் முறை முதல் சுற்று உலகக் கிண்ணப் போட்டிகளில் பாரிய சவாலை எதிர்கொள்ளாத பிரான்ஸ் இரண்டாவது சுற்றில் ஆர்ஜன்டீனாவிடம் முதல் தடவையாக பெரும் நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளது.

பொதுவாக தென் அமெரிக்க நாடுகளுக்கு எதிராக பிரான்ஸ் திறமையாக விளையாடிவந்துள்ள போதிலும் ஆர்ஜன்டீனாவிடம் உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரான்ஸின் ஜம்பம் பலித்ததில்லை.

இந்த இரண்டு அணிகளும் 11 சர்வதேச போட்டிகளில் சந்தித்துள்ளன. அவற்றில் 6 க்கு 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் ஆர்ஜன்டீனா முன்னிலையில் இருக்கின்றது. உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு தடவைகளும் (1930 இல் 1 க்கு 0, 1978இல் 2 க்கு 1) பிரான்ஸை ஆர்ஜன்டீனா வெற்றிகொண்டுள்ளது.

பிரேஸிலில் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆர்ஜன்டீனாவை மேலதிக நேரத்தின்போது போட்ட கோலின்மூலம் வெற்றிகொண்டு உலகக் கிண்ணத்தை நான்காவது தடவையாக சுவீகரித்த ஜேர்மனி இவ் வருடம் முதல் சுற்றுடன் பலத்த ஏமாற்றத்துடன் வெளியேறிது. ஆர்ஜன்டீனாவோ தட்டுத்தடுமாறி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது.

பிரான்ஸின் போல் பொக்பா, அன்டொய்ன் க்றீஸ்மான் ஆகியோருக்கும் ஆர்ஜன்டீனாவின் லயனல் மெசி, ஏஞ்சல் டி மரியா ஆகியோருக்கும் இடையிலான போட்டியாக இன்றைய முதலாவது  முன்னோடி கால் இறுதிப் போட்டி அமையப்போகின்றது.

மேலும் முன்னாள் சம்பின்களான இந்த இரண்டு அணிகளும் தமது கால்பந்தாட்ட ஆற்றல்களை இப் போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை வெளிப்படுத்தி முழு கால்பந்தாட்ட உலகையும் பரபரப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

அணிகள் விபரம்

பிரான்ஸ்: ஹியூகோ லோரிஸ் (அணித் தலைவர்), பெஞ்சமின் பவார்ட், ரபாயல் வெரானி, செமுவல் உம்டிட்டி, லூக்கஸ் ஹேர்னண்டெஸ், போல் பொக்பா, என்’கோலோ கன்டே, கய்லியான் எம்பாப்பே, அன்டொய்ன் க்றீஸ்மான், ஊஸ்மான் டெம்பேலே, ஒலிவர் கிரூட்.

ஆர்ஜன்டீனா: ப்ரன்கோ ஆர்மனி, கேப்றியல் மெர்க்காடோ, நிக்கலஸ் ஒட்டாமெண்டி, மார்க்கோஸ் ரோஜோ, நிக்கலஸ் டெக்லியாவிக்கோ, ஈவர் பெனேகா, ஜேவியர் மெஷ்செரானோ, என்ஸோ பெரெஸ், ஏஞ்சல் டி மரியா, லயனல் மெசி (அணி்த் தலைவர்) கொன்ஸாலோ ஹிகெய்ன்.

(என்.வீ.ஏ.)