தற்போது இருக்கின்ற யானை வேலிகளுக்கு மேலதிகமாக நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ள 2500 கிலோ மீற்றர் யானை வேலிகளை நிர்மாணிக்கும் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற யானை வேலிகள் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.   

யானை வேலிகளை முறையாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி குறைபாடுகள் உள்ள மற்றும் செயற்படாமல் உள்ள மின்சார வேலிகளை உடனடியாக புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். 

யானை வேலிகளை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த 1860 பேர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 4000 கிலோ மீற்றர் தூரத்திற்கான யானை வேலிகளை பராமரிப்பதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

இந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார். இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படையினருக்கான உணவு செலவுகளுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். 

பேண்தகு அபிவிருத்தி வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, அமைச்சின் செயலாளர் ஏ.பி.ஜி.கி த்சிறி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிலர் ரவீந்ர விஜேகுணரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.