(எம்.மனோசித்ரா)

தபால் சேவை பணியாளர்கள் இரண்டு வார காலமாக மேற்கொண்ட வேலைநிறுத்த தினங்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்குமானால் மாத்திரமே முழு சம்பளத்தையும் வழங்க முடியும் என தபால் சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் சேவையாளர்கள் வேலைநிறுத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. 

சம்பள பிரச்சினை தொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதி வழங்கும் வரை வேலைநிறுத்தத்தை கைவிடக் கோரியும் கைவிடப்படவில்லை. இந்நிலையிலேயே தற்போது வேலைநிறுத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. இதன் போது அவர்களுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்ததோடு சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனவும் தபால் சேவைகள் அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் 11ஆம் திகதி முதல் 19ஆம் வரை மாத்திரம் சம்பளத்தை வழங்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க செயற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிடுகையில்,

"கடந்த 16 ஆம் திகதிக்கு பின்னரே எமக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது. எனவே 11 முதல் 16 ஆம் திகதி வரை எமக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் ஜூலை மாதம் வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் தீர்வு கிட்டவில்லை எனில் மீண்டும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தினை மேற்கொள்வோம்" என்றார்.