உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாம் சுற்று நேற்றுடன் நிறைவுபெற்றுள்ள நிலையில், இரண்டாம் சுற்று நாளை ஆரம்பமாகின்றது.

முன்னாள் சம்பியன்களாக ஆர்ஜன்டீனாவும் பிரான்ஸும் முதலாவது நொக் அவுட் போட்டியில் நாளை மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் போர்த்துக்கலை உருகுவே எதிர்த்தாடுகின்றது.

21ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி கடந்த 14 ஆம் திகதி ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நொக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் உருகுவே, ரஷ்யா (ஏ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி பிரிவு), பிரான்ஸ், டென்மார்க் (சி பிரிவு), குரோஷியா, ஆர்ஜென்டீனா (டி பிரிவு), பிரேசில், சுவிற்சர்லாந்து (இ பிரிவு), சுவீடன், மெக்சிகோ (எப் பிரிவு), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி பிரிவு), கொலம்பியா, ஜப்பான் (எச் பிரிவு) ஆகிய 16 அணிகள் ‘நொக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

சவுதிஅரேபியா, எகிப்து (ஏ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி பிரிவு), பெரு, அவுஸ்திரேலியா (சி பிரிவு), நைஜீரியா, ஐஸ்லாந்து (டி பிரிவு), செர்பியா, கோஸ்டாரிகா (இ பிரிவு), தென் கொரியா, ஜெர்மனி (எப் பிரிவு), துனிசியா, பனாமா (ஜி பிரிவு), செனகல், போலந்து (எச் பிரிவு), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

இன்று ஓய்வு நாளாகும் இந்நிலையில், நாளை நொக் அவுட் சுற்றுக்கள் தொடங்கவுள்ளன. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் ‘டி’ பிரிவில் 2-ஸ்ரீ ஆவது இடத்தை பிடித்த ஆர்ஜன்டீனா ஆகிய அணிகள் முதல் போட்டியில் மோதவுள்ளன. இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30-க்கு தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை நடைபெறும் 2 ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே மற்றும் ‘பி’ பிரிவில் 2ஆவது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் மோதுகின்றன.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை நொக் அவுட் சுற்றுக்கள் நடைபெறவுள்ளன. கால்இறுதி போட்டிகள்  6 ஆம் திகதி மற்றும் 7 ஆம் திகதிகளிலும், அரை இறுதி போட்டிகள் 10 மற்றும் 11 ஆம் திகதிகளிலும், 3 ஆவது இடத்திற்கான போட்டி 14 ஆம் திகதியும் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இறுதி போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.