கடந்த 25 வருடங்களில் கருத்தடை ஊடாக சுமார் ஆறு இலட்சம் குழந்தைகளின் பிறப்பு இல்லாமல் செய்யப்பட்டு 'மலையக மக்களின் நிகழ்கால, எதிர்கால அரசியல் பலம் தகர்க்கப்பட்டுள்ளது என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்தார்.

அக்கரைப்பத்தனை பெல்மொரோல் தோட்டத்தில் முழுமையாக எரிந்துபோன சுமார் 14 குடும்பங்களின் லயன் அறை வீடுகளை இந்து சம்மேளனத்தின் தலைவர் நார.அருண்காந்த்  தேசிய அமைப்பாளர் சந்திரபோஸ் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை (28) சென்று பார்வையிட்டு அவர்களுக்கு  உலர் உணவுப் பொருட்கள், உடைகள், மற்றும் விதவைகளுக்கான வாழ்வாதாரப் பொருட்களை வழங்கிவைத்து உரையாற்றியபோதே சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

'இந்நாட்டிலே கடந்த 30 வருடங்களாக மிகக் கொடூரமான யுத்தம் ஒன்று நடைபெற்று சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் இடம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழ்கின்றனர். சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு தமிழ் மக்களின் இன விகிதாசாரம், இனப்பரம்பல் பாரியளவு குறைந்தது. 

குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இளைஞர்களே அதிகமாக மாண்டு போயினர். இது ஒட்டுமொத்த முப்பது வருட யுத்தத்தின் விளைவு. எனினும் யுத்தம் இன்றி விமானப் படையினரின் குண்டு வீச்சின்றி, செல்லடியின்றி மலையகத்தில் ஒரு இன சங்ஹாரமே நடைபெற்று முடிந்துவிட்டது, நடைபெற்றும் வருகிறது.

கடந்த 1988 ஆம் ஆண்டு இருந்து 2015 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை  5 இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் வரையான குழந்தைகள் எமது மலையக சமூகத்திற்கு பிறந்திருக்க வேண்டும். எனினும், தோட்டங்களில் நடைபெற்று வரும் குடும்பக்கட்டுப்பாட்டு கருத்தடை மூலம் எமது சமுதாயத்திற்கு பிறந்திருக்க வேண்டிய 6 இலட்சம் குழந்தைகள் இல்லாமலாக்கப்பட்டுவிட்டனர். 

எமது அரசியல் தலைவர்களுக்கு இப்பாரதூரமான பிரச்சினை பற்றி நன்கு தெரியும். சமூக சிவில் அமைப்புக்களுக்கும் தெரியும். எனினும், தெரிந்தும் தெரியாதது போல் நழுவிச் செல்கின்றனர்.

எனவே நாம் இப் பிரச்சினையை மக்களிடம் கொண்டு சென்று பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். ஊடகங்கள் எமக்கு பாரிய அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இத்தோட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக இங்கு எரிந்து தரைமட்டமான வீடுகளோடு சேர்த்து பதினான்கு குடும்பங்களுடைய எதிர்கால வாழ்வும் கனவுகளும் கூட சாம்பராகி போய்விட்டதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். 

இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு மனதளவில் பெரும் உளச்சோர்வுக்குட்பட்டுள்ளனர். எம்மால் முடிந்தவரை பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு தொடர்ந்து வாழ்வாதார உதவிகளை செய்வோம். இம்மக்களின் பாரிய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.

48 மணித்தியாலத்திற்குள் இந்து கலாசார பிரதி அமைச்சை ஜனாதிபதியின் செயலாளருடன் பேசி பிடுங்கி எறிந்த எமக்கு உங்களுக்கு உதவுவது இயலாத விடயமாக இருக்க முடியாது. நீங்கள் எமது உறவுகள் 'நமக்காக நாம்' உதவி திட்டத்தின் கீழ் உங்களுடைய அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இதற்கான உபாயங்கள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றாக இலக்குகள் நிறைவேற்றப்படும். நீங்கள் தனித்துவிடப்படவில்லை. உங்களுக்காக இந்து சம்மேளனம் என்ற பலம்பொருந்திய அமைப்பு உள்ளது என்ற தைரியத்தில் மனச்சோர்வின்றி உற்சாகமாக செயல்படுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.