(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெயர் குறிப்பிடப்படும் யாராக இருந்தாலும் அவருக்கு கூட்டு எதிர்கட்சி ஆதரவு வழங்க தயாராகவுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியினரின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்தராஜபக்ஷ இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவருக்கு அரசியலில் மிகுந்த அனுபவம் காணப்படுகின்றது. கோத்தபாயராஜபக்ஷ மாத்திரமல்ல. மஹிந்த யாரை பெயர்குறிப்பிடுகின்றாரோ அவருக்கு நாம் எமது பூரண ஆதரவினை வழங்குவோம். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பொது எதிரணியில் உள்ள உறுப்பினர்களில் சுமார் 10 பேர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கக் கூடிய தகுயுடையவர்களாகக் காணப்படுகின்றனர். எனினும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யக்கூடிய தகுதி மஹிந்த ராஜபக்ஷவிடமே காணப்படுகின்றது என்றார்.