இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் அடுத்த மாதம்

By T Yuwaraj

29 Jun, 2018 | 12:03 PM
image

பரந்து விரிந்த அண்டவெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான கோள்களும் அமையப்டிபற்றுள்ளன. இதில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் எதிர்வரும் ஜூலை மாதம் இருவேறு அபூர்வ நிகழ்வுகள் இந்த அண்டவெளியில் அரங்கேறவுள்ளது. அதாவது அடுத்த மாதம் 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்று வட்டப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதியன்று முழு சந்திர கிரகணம் உருவானது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஹவாய், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த சந்திர கிரகணத்தின்போது சூப்பர் மூன், புளூ மூன், ஆகிய நிகழ்வுகள் ஏற்பட்டன. சந்திரன் வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாக தெரிவதே சூப்பர் மூன் எனப்படும்.

இந்தாண்டின் தொடக்கத்தில் முழு சந்திர கிரகணம் தெரிந்த நிலையில், எதிர்வரும் ஜூலை 27 மற்றும் 28ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுவாகும்.

கடந்த முறையை விட பெரிய அளவிலான இந்த சந்திர கிரகணம், 1 மணி 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும்.

வட அமெரிக்கா, ஆர்டிக் மற்றும் பசிபிக் பகுதிகளில் இது தெரியாது. ஆசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவில் காலை நேரத்திலும், ஐரோப்பா, ஆபிரிக்காவில் மாலை நேரத்திலும் இந்த சந்திர கிரகணம் தெரியும். இந்தியாவில் ஜூலை 27-28 திகதிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் 1 மணிநேரம் 43 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 27ம் திகதியன்று சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஜூலை மாதம் மற்றொரு அரிய நிகழ்வும் ஏற்படவுள்ளது.

அதாவது, ஜூலை 30ஆம் திகதி செவ்வாய் கிரகமும் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. அதாவது 57.58 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய் கிரகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாகவும் பெரியதாகவும் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதையடுத்து  2035ஆம் ஆண்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபூர்வ நிகழ்வு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 225 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right