இளந்தலைமுறையினர் பெசனுக்காகவும், மற்றவர்களை கவர்ந்திழுக்கவும் புகைபிடிக்கிறார்கள். அதே போல் பணியிடங்களில் விரைவாக பணி செய்து முடிக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு ஆளாகி மன அழுத்தத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

 ஒரு சிலர் இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட நிவாரணமாக மருந்துகளையும் மாத்திரைகளையும் வைத்தியர்களின் ஆலோசனையுடனும், ஆலோசனையில்லாமலும் எடுக்கிறார்கள்.

வேறு சிலர் உறக்கமின்மை காரணமாகவும், பயணத்தின் போதும், பயணம் அல்லாத போதும் ஏற்படும் வாந்தி காரணமாகவும் மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். ஆனால் இவற்றிற்கான கால எல்லையை வைத்தியர்களின் ஆலோசனையின்றி தொடர்வதால் Chronic Obstructive Pulmonary Disease எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயிற்கு ஆளாகிறார்கள். அதாவது இவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் எம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்களின் வளர்ச்சியையும், வலிமையையும் சிதைத்துவிடுவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.

தெற்காசியா முழுமைக்கும் இந்த பாதிப்பால் மரணமடைவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நோயிற்கு ஆளானவர்கள் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். அத்துடன் உணவு குழாய் அழற்சி மற்றும் சுவாச கோளாறுகளுக்கும் ஆளாகிறார்கள்.

புகைபிடிப்பது, மரபியல் காரணம் போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு ஆல்பா =1அன்ட்டிரிப்சின் என்ற புரத சத்து குறைபாட்டின் காரணமாகவும் இவை ஏற்படலாம். இதனால் கல்லீரலும், நுரையீரலும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு நான்கு நிலைகளாக வரையறைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் தான் சிகிச்சைப் பெற வைத்தியர்களை நாடுகிறார்கள். இந்த நோய் தொற்று நோய் அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

தொடர் இருமல், சளியுடன் கூடிய இருமல், மூச்சு திணறல், பெருமூச்சு அடிக்கடி விடுதல், நெஞ்சு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்றால் அவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சையளிப்பார்கள். இதற்கு பிரிவென்டிவ் தெரபி என்ற சிகிச்சை அளித்து குணப்படுத்துவார்கள். ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டியதிருக்கும்.

புகைபிடிப்பதை முற்றாக கைவிடவேண்டும். போஷாக்கான உணவை உட்கொள்ளவேண்டும். மனதை இயல்பாக வைத்திருக்கவேண்டும். இதற்காக யோகா பயிற்சியோ அல்லது தியானமோ அல்லது மூச்சு பயிற்சியோ செய்வதும் சிறந்தது.