உலகக் கிண்ண இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறுவதற்கு ஒரு புள்ளி மாத்திரமே தேவை என்பதை அறிந்திருந்த சுவிற்சர்லாந்து, அப் புள்ளியை கொஸ்டாரிக்காவுக்கு எதிரான போட்டியை வெற்றிதோல்வியின்றி (2 க்கு 2) முடித்ததன் மூலம் பெற்றுக்கொண்டது.

இப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது மட்டுமல்லாமல்  ரஷ்யாவில் முதல் தடவையாக கொஸ்டா ரிக்கா கோலையும் போட்டது.

முதலிரண்டு போட்டிகளில் போன்றே வேகம் குன்றி காணப்பட்ட சுவிற்சர்லாந்து 31ஆவது நிமிடத்தில் ப்ளெரிம் டிஸெமய்லி முதலாவது கோலைப் போட்டார்.

இடைவேளையின் பின்னர் 58 ஆவது நிமிடத்தில் கொஸ்டா ரிக்காவின் கெண்டொல் வொஸ்டன் பந்தை தலையால் முட்டி அருமையான கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

போட்டியின் 88 ஆவது நிமிடத்தில் மாற்று வீரர் ஜொசிப் டேர்மிக் கோல் ஒன்றைப் போட்டு சுவிற்சர்லாந்தை மீண்டும் முன்னிலையில் இட்டார். உபாதையீடு நேரத்தில் கொஸ்டா ரிக்கா கோல் நிலையை சமப்படுத்தியது.

அநாவசியமாக சுவிற்சர்லாந்து வீரர் ஒருவர் பெனல்டி ஒன்றைக் கொடுத்தார்.

அந்த பெனல்டியை ப்றயன் ருய்ஸ் உதைத்த போதிலும் குறுக்கு கம்பத்தில் பட்டு திரும்பிவந்த பந்து சுவிற்சர்லாந்து கோல்காப்பாளர் யான் சொமரின் தலையில் பட்டு சொந்த கோலாக உள்ளே சென்றது.

 (என்.வீ.ஏ.)