அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. 

சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணுவாயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இந்நிலையில் வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.

இதற்கிடையில், ட்ரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தலைமையிடம் இருந்து திட்டவட்டமான உத்தரவு வரும்வரை அங்குள்ள அதிகாரிகள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வரக்கூடும் எனவும் அந்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.