ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் டி குழுவில் இடம்பெற்ற குரோஷியா தனது கடைசி லீக் போட்டியில் ஐஸ்லாந்தை 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டது.

ரொஸ்டொவ் ஒன் டொன் விளையாட்டரங்கில் நேற்று ஈட்டிய இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக தோல்வி அடையாத அணியாக குரோஷியா தனது குழுவில் முதலிடத்தைப் பெற்றது. 

ஆர்ஜன்டீனாவைப் போன்றே கடும் முயற்சியின் பின்னர் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில்  குரோஷியா வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்ட இப் போட்டியின் முதல் 45 நிமிடங்களில் எந்த அணியும் கோல் போடவில்லை. 

ஆனால் இடைவேளைக்கு முன்னர் கோல் போடுவதற்கான நான்கு வாய்ப்புகளை ஐஸ்லாந்து தோற்றுவித்தது. ஆனால் குரோஷியா கோல் காப்பாளர் லோவ்ரே காலினிக் அவற்றைத் தடுத்த வண்ணம் இருந்தார்.

இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் மிலான் படேல்ஜ் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

18 நிமிடங்கள் கழித்து டேஜான் லோவ்ரென் கையால் பந்தைத் தட்டியதால் ஐஸ்லாந்துக்கு பெனல்டி கிடைத்தது.

இந்தப் பெனல்டியை ஜில்வி சிகுரோசன் இலக்கு தவறாமல் உதைத்து கோல் நிலையை 1 க்கு 1 என சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் திறமையாக விளையாடி இரசிகர்களை விறுவிறுப்பில் ஆழ்த்தினர்.

போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது (90ஆவது நிமிடம்) ஐவன் பெரிசிக் கோல் போட்டு குரோஷியாவின் வெற்றியை உறுதி செய்தார். 

(என்.வீ.ஏ.)

முதல் சுற்று டி குழுவில் அணிகளின் இறுதி நிலை

அணி வி வெ தோ பெ கொ நி பு

குரோஷியா 3 3 0 0 7 1 +6 9

ஆர்ஜன்டீனா 3 1 1 1 3 5 -2 4

நைஜீரியா 3 1 0 2 3 4 -1 3

ஐஸ்லாந்து 3 0 1 2 2 5 -3 1

(குறிப்பு: வி: விளையாடிய போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், நி: நிகர கோல்கள், பு: புள்ளிகள்)