(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்க முடியாதமையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் செய்து கொள்ளப்போகும் எட்கா ஒப்பந்தத்தை எதிர்க்கின்றது. அவர்களிடம் இந்திய எதிர்ப்பு கொள்கையே இருக்கின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டை ஆளும் அரசாங்கம் இந்தியாவுடன் எந்த ஒப்பந்தங்களை செய்தாலும் அதனை எதிர்க்கும் கொள்கையையே மக்கள் விடுதலை முன்னணி கொண்டுள்ளது. அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டங்களை நடத்தி, நாட்டை இந்தியாவிடம் தாரைவார்க்கப் போவதாக கோஷம் எழுப்பினர்.

ஆனால் அந்த ஒப்பந்தம் மூலம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு இன்று அது சிறந்த முறையில் இடம்பெற்று வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணியும் அதன் நன்மைகளை இன்று அனுபவித்து வருகின்றது.