(ரி.விருஷன்) 

அரசாங்கம் வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டுடன் பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10 ஆவது ஆண்டை எட்டவுள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்கு இருக்கும் அதிகாரங்களை ஏற்கனவே குறைத்துள்ள நிலையில் தற்போது வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் ஏனைய அதிகாரங்களையும் கைப்பற்றுவதற்கான முயற்சியாகும்.

வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிடுவது என்பது எமக்கு நன்றாக தெரியும் ஆகையால் இது தொடர்பில் எவரும் எமக்கு சொல்லித்தர வேண்டிய தேவையில்லை. இது குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எமக்கே உண்டு என்றார்.