(எம்.எம்.மின்ஹாஜ்)

தேர்தல் இழுத்தடிப்பு செய்வது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகும். மக்கள் இறைமையை பாதுகாக்க தேர்தலை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும்.  ஆகவே தேர்தலை உடன் நடத்த எமக்கு ஒத்துழைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசாங்கத்தின் தலைமைகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான கடிதம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இன்று கையளிக்கப்பட்டது.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். இதன்போது தேர்தல் உடன் நடத்துவதற்கு அரசியல் கட்சி தலையீடு செய்ய வேண்டும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுமாத்திரமின்றி தேர்தல் இழுத்தடிப்பு செய்வதற்கு இன்னும் அவகாசம் வழங்க முடியாது. ஆகவே உடன் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசாங்கத்தின் தலைமைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாகாண சபைக்கான கலப்பு தேர்தல் முறைமை தொடர்பான சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டு தற்போது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த எல்லை நிர்ணய அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுதல் அல்லது பிரதமர் தலைமையில் நியமனம் செய்யப்பட்ட குழுவொன்றினால் மீளாய்வு செய்யப்பட்டு 2 மாத காலப்பகுதியினுள் ஜனாதிபதி அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்ற போதிலும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை .

மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளமை காரணமாக 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவி காலம் நிறைவடைந்து 7 மாதங்கள் ஆகின்றன. இந்த மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் 7 மாதங்கள் தாமதமாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் ஒக்டோபர் மாதம் பதவிகாலம் நிறைவடையவுள்ள மத்திய, வடக்கு மற்றும் வட மேல் மாகாணங்களின் தேர்தலோடு தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியபாடு எமக்கு இல்லை. அது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முடியாத காரியமாகும்.

தேர்தல் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவது குறித்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தேர்தல் கண்காணிப்பு  அமைப்புகளும் தேர்தல் ஆணைக்குழுவின் மீது குற்றம் சுமத்துகின்றன.

ஆகவே தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்தாது பிற்போடுவது ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணானது. ஆகவே தேர்தலை உடன் நடத்த தேவையான அலுவல்களை செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் மக்கள் இறைமை தேர்தல்களை உரிய காலப்பகுதியினுள் நடத்துவதிலேயே தங்கியுள்ளது.ஆகவே இது தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரியவின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.