எமக்கு உரித்துக்களை தரமறுக்கும் சிங்கள அரசாங்கம் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேலும் மேலும் தவணை கேட்டு அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பை குறைத்து வருகின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் விசேட குழுக் கூடம் இன்று காலை 10 மணியளவில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவை அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். எமது தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வழி நடத்துவது எமது கடமையாகும். இதுவரை காலமும் எமது அரசியல் கொள்கைகளை முன் வைத்து கூட்டங்கள் வைத்து மக்களுக்கு அரசியல் அறிவைப் புகட்டி வந்துள்ளோம். தொடர்ந்தும் அதனைச் செய்யவுள்ளோம்.

ஆனால் எமது காலத்தின் பின்னர் எமது அரசியல் சமூக அமைப்புக்களைக் கொண்டு நடத்தப் போவது இளைஞர் யுவதிகேள. திடீர் என்று தலைமைத்துவம் அவர்கள் வசம் செல்வதிலும் பார்க்க இப்பொழுதிருந்தே அவர்கள் தமது காரியங்களையும் கடப்பாடுகளையும் கடமைகளையும் உணர்ந்து நடக்கத் தொடங்கினால் அது நன்மை தரும்.

இதன் காரணத்தினால்தான் தமிழ் மக்கள் பேரவை இளைஞர் மகாநாடு ஒன்றினை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. இவ்வாறான மாநாடுகளில் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்தியுள்ளாம். இதன்போது அவர்களுக்கு அரசியல், சமூக ரீதியாக பல விடயங்களை அவர்களுக்கு எடுத்து கூற விரும்புகின்றோம். 

இன்று எம்மிடையே ஒரு வித பலவீனம் உருவாகியுள்ளது. அதாவது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் நாம் தோற்றுவிட்டோம் என்ற ஒரு மனோ நிலை எங்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த இனி யார் வரப் போகின்றார் என்ற ஒரு நம்பிக்கை அற்ற நிலை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனை மாற்றி எம் இளைஞர், யுவதிகள் மனதில் வலுவேற்றுவது எமது பொறுப்பு. 

இன்று எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள், சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருகின்றது.

இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்ற சிங்களத் தலைமைத்துவம். சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. 

எனவே இத் தருணத்தில்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்டிருக்கும் இடர்களை பற்றி உலகறிய செய்ய வேண்டும். இதனூடாக அவர்களே சுய ஆட்சியை வழங்க முன்வர வேண்டும் என்றார்.