(இராஜதுரை ஹஷான்)

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுவதா அல்லது முழுமையாக கட்சியில் இருந்து வெளியேறி  மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினரது கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதா என்ற தீர்மானத்தினை 16 உறுப்பினர்களும் வெகு விரைவில் தீர்மானிக்க வேண்டும். அதனை விடுத்து பொது எதிரணியின் கட்சி உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொது ஜன பெரமுனவின் 54 உறுப்பினர்களும் தற்போது ஒருமித்த அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டே  அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டு பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம்  என தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகிய  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்து கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டிலே  தற்போது  மஹிந்த  ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின்  பெரும்பாண்மை உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். 54  உறுப்பினர்களின் பாரிய முயற்சியே  பொதுஜன பெரமுன  எழுச்சிக்கு பிரதான காரணமாக காணப்படுகின்றது. 16 பேருக்காக 54 பேரில் ஆதரவினை இழக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களுக்கும், கட்சி தொடர்பான தீர்மானங்களுக்கும்  16 உறுப்பினர்களும்  இன்றும்  கலந்துக் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின்  உறுப்பினர்கள்  இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இருப்பினும் இன்று  கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும்  உறுப்பினர்களும்  கட்சியின்  அங்கத்துவம் பெறாமலே கட்சியில் செல்வாக்கு செலுத்தி  வருகின்றனர். ஆனால் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படாமல் தனித்த கொள்கையிலே செயற்படுகின்றனர்.

அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் 16  உறுப்பினர்களுக்கும்  முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு இருப்பின் இவர்கள் எவ்வாறு கூட்டு எதிரணியினருடன் இணைந்து செயற்படுவார்கள்   என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளமை இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது.

முறையற்ற  நிர்வாகத்தினை மேற்கொள்ளும் தேசிய அரசாங்கத்தில் கடந்த மூன்று வருட காலமாக இணைந்தே  நாட்டு நிர்வாகத்தினை முன்னெடுத்து சென்றனர். பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்திற்கே  சாதகமாக அமையும்  என நன்கு அறிந்தும் எமக்கு ஆதரவு அளித்ததும் சந்தேகத்தினை தோற்றுவிக்கும்  செயற்பாடாகவே காணப்படுகின்றது.  ஐக்கிய  தேசிய கட்சியுடன்  இணைந்து அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  பதவிகளை வைத்துக் கொண்டு கூட்டு எதிரணியுடன் இணக்கமாக செயற்பட முடியாது. அது கட்சியின் கொள்கைக்கு முரணானது மாத்திரமன்றி கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் கருத்தொற்றுமையினை  ஏற்படுத்தும் என்றார்.