( எம். எம். சில்வெஸ்டர் )

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாகாண  கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்  மேல் மாகாண வடக்கு அணியை 16 ஓட்டங்களால் வெற்றி கொண்ட மேல் மாகாண மத்திய அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

நாட்டின் அனைத்து மாகாணங்களின் வீரர்களை உள்ளடக்கியவாறான 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாகாண கிரிக்கெட் போட்டி கடந்த 12 ஆம் திகதியன்று ஆரம்பமானது. வடக்கு , கிழக்கு  இரு மாகாணங்கள் அடங்கலாக மொத்தமாக 10 அணிகள் பங்குகொண்ட இத்தொடரில், மேல் மாகாணத்திலிருந்து (வடக்கு,மத்திய, தெற்கு)3 அணிகள் பங்குகொண்டன. 

மேல் மாகாணம் - வடக்கு, வட மேல் மாகாணம், வடக்கு மாகாணம் , மத்திய மாகாணம் , வட மத்திய மாகாணம் ஆகியன குழு ஏயிலும், மேல் மாகாண - மத்திய அணி, தெற்கு மாகாணம், மேல் மாகாணம் - தெற்கு , ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம் குழு பீயிலும் விளையாடியிருந்தன.

லீக் சுற்று நிறைவில் இரு குழுக்களிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதன்படி குழு ஏ யில் மேல் மாகாண வட அணியும், குழு பீ யில்  மேல் மாகாண மத்திய அணியும் முதலிடங்களை வகித்து இறுதிப் போட்டியில் மோதின.

இதன்டிப கொழும்பு சி.சி.சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேல் மாகாணத்தின் மத்திய அணி 48.4 ஓவர்களில்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேல் மாகாணத்தின் வடக்கு அணி 50 ஓவர்களில் 209 ஓட்டங்களை பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக மேல் மாகாணத்தின் மத்திய அணி சார்பில் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை குவித்த காமில் மிஷ்ரா தெரிவானார்.