ஸ்பெய்ன், மொரோக்கோ போட்டியில் போன்றே உபாதையீடு நேரத்தில் வீடியோ உதவி மத்தியஸ்தரின் (வீ.ஏ.ஆர்.) ஒத்துழைப்பு பெறப்பட்டு ஈரானுக்கு வழங்கப்பட்ட பெனல்டியின் மூலம் போர்த்துக்கலின் வெற்றிக்கனி பறிபோனது. 

போர்த்துக்கல் பெனல்டி எல்லையில் ஈரான் வீரரும் போர்த்துக்கல் வீரரும் உயரே தாவி பந்தை தலையால் தட்ட முற்பட்டபோது போர்த்துக்கல் வீரரின் கையில் பந்து பட்டது. ஆனால் அதனை மத்தியஸ்தர் உடனடியாக கவனிக்கத் தவறினார். ஈரான் வீரர்களின் வற்புறுத்தலை அடுத்து வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்பை நாடிய மத்தியஸ்தர், அதன் பின்னர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள வீ.ஏ.ஆர். தொலைக்காட்சியில் சலன அசைவுகளை நன்கு பார்வையிட்டு ஈரானுக்கு பெனல்டியை வழங்கினார். 

இந்தப் பெனல்டியை கரிம் அன்சாரிபார்ட் கோலாக்கி (90+3 நிமிடம்) கோல்நிலையை சமப்படுத்தினார்.

இரண்டு அணிகளும் கடுமையாகவும் சரிசமமாகவும் மோதிக்கொண்ட இப் போட்டியில் மத்திஸ்தரின் சில தீர்ப்புகள் ஈரான் வீரர்களை அதிருப்தி அடையச் செய்தது. இதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் மத்திஸ்தருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

போட்டியின் 45 ஆவது நிமிடத்த்தில் ரிக்கார்ட்டோ கரேஸ்மா வலது பாதத்தால் வளைவாக செல்லும் வகையில் பந்தை உதைத்து போர்த்துக்கலின் முதலாவது கோலைப் போட்டார்.

போர்த்துக்கலுக்கு கோல் போடும் இன்னுமொரு சந்தர்ப்பம் உருவானது. அப்போது க்றிஸ்டியானோ ரொனால்டோ சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 53 ஆவது நிமிடத்தில் க்றிஸ்டியானோ ரொனால்டோவின் பெனல்டியை ஈரான் கோல்காப்பாளர் அலி பெய்ரன்வாந்த் இடது பக்கமாக தாவி தடுத்து நிறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த வண்ணம் இருந்தனர். ஆனால் அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

போட்டியின் 83 ஆவது நிமிடத்தில் க்றிஸ்டியானோ ரொனால்டோவும் மோர்ட்டீஸா பௌராலிகாஞ்சியும் மோதலில் ஈடுபட்டனர். இருவருக்கும் சிவப்பு அட்டை வழங்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால்  வீ.ஏ.ஆர். ஒத்துழைப்புப் பெறப்பட்டு ரொனால்டோவுக்கு மாத்திரம் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

தொடர்ந்து உபாதையீடு நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் வீடியோவில் சலன அசைவுகளைப் பார்வையிட்ட மத்தியஸ்தர் ஈரானுக்கு பெனல்டியை வழங்க அதனை கரிம் முறையாகப் பயன்படுத்திக்கொண்டார். 

தொடர்ந்து கடைசிக் கட்டத்தில் வெற்றி கோலைப் போடுவதற்கு ஈரான் எடுத்த முயற்சி மயிரிழையில் தவற போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

பி குழு போட்டிகளின் முடிவுடன் ஈரானும் மொரோக்கோவும் முதலாம் சுற்றுடன் நாடு திரும்புகின்றன.

 (என்.வீ.ஏ.)