பத்து வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட வரவேற்பு நாடான ரஷ்யாவுக்கு எதிரான ஏ குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றியீட்டிய உருகுவே குழுவுக்கான அணிகள் நிலையில் தோல்வி அடையாத அணியாக முதலாம் இடத்தைப் பெற்றது.

போட்டி தொடங்கிய 10ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவாரெஸ் போட்ட ப்றீ கிக் கோல், 23ஆவது நிமிடத்தில் டெனிஸ் செரிஷேவ் போட்டுக் கொடுத்த சொந்த கோல் என்பன ரஷ்யாவின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன.

இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியிருந்ததால் சமாரா எரினா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் முக்கியமாக அமையவில்லை. எனினும் குழுவில் முதலாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.

இப் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான இகோர் ஸ்மொல்னிக்கோவ், சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டமை ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. 

இப் போட்டியின் 59ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டைக்கு இலக்கான உருகுவே வீரர் ரொட்றிகோ பென்டன்கர், உலகக் கிண்ண வராற்றில் பிறந்த தினத்தன்று மஞ்சள் அட்டை பெற்ற இரண்டாவது வீரரானார். இதற்கு முன்னர் 1994 உலகக் கிண்ணப் போட்டிகளின் இரண்டாம் சுற்றின்போது இத்தாலி வீரர் ஜியான்பர்ன்கோ ஸோலா தனது பிறந்த தினத்தன்று சிவப்பு அட்டைக்கு இலக்காகியிருந்தார்.

போட்டியின் 90ஆவது நிமிடத்தில் டியகோ கோடின் கோலை நோக்கி உதைத்த பந்தை ரஷ்ய கோல்காப்பாளர் இகோர் அக்கின்வீவ் கையால் தட்டிய போதிலும் எடின்சன் கெவானி கீழே வீழ்ந்து பந்தை கோலினுள் புகுத்தி உருகுவேயின் 3ஆவது கோலைப் போட்டார்.

இதன் மூலம் மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளில் உருகுவே சார்பாக கோல் போட்ட வீரர்களில் சுவாரஸுக்கு அடுத்ததாக கெவானி இரண்டாவது வீரரானார். 

(என்.வீ.ஏ.)