(எம்.எம்.மின்ஹாஜ்)

தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் மாகம்புற, மத்தள போன்று துறைமுகம், விமான நிலையங்கள் பல அமைத்திருப்பேன் என ஹிட்லரின் மூத்த சகோதரர் கூறியுள்ளார். எனினும் அவரது ஆட்சி காலத்தின் போது துறைமுகம், விமான நிலையத்தை நிர்மாணிக்க எடுத்த கடனில் இருந்து நாம் இலகுவாக தப்பிக்கொண்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி வெலிவிட்டிய திவிதுர பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்து  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

டொலரின் பெறுமதி அதிகரிப்பதனை எம்மால் தடுக்க முடியாது. அது எமது கைகளில் இல்லை. ஆனால் ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க வட்டி வீதத்தை அதிகரிக்கலாம். அவ்வாறு செய்தால் எமது வியாபாரிகளிடம் பணம் இல்லாமல் போய்விடும். இவ்வாறான பெரும் நெருக்கடியான நிலைமைக்கே நாம் முகங்கொடுத்துள்ளோம். 

தற்போது நாம் பிரதேச செயலகங்கள் பலவற்றை நவீன மயப்படுத்தி வருகின்றோம். இதன்படி தெற்கு அபிவிருத்தியை பொறுத்தவரையில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக தெற்கில் சுற்றுலா துறை உட்பட பல்வேறு துறைகளை நாம் வளர்ச்சிக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

இதன்பிரகாரம் தெத்துவ, பென்தர போன்ற பகுதிகளை இதற்காக தேர்ந்தெடுத்து பெரும் வலயமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அத்துடன் கிராமிய தொழில் முயற்சியாளர்களுக்கான பூரண உதவி ஒத்தாசை வழங்கும் வேலைத்திட்டத்தை தற்போது நாம் ஆரம்பித்துள்ளோம். 

அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்புவது பெரும் கடினமாகும். நாட்டின் அபிவிருத்திக்காக அதிகளவில் கடன் பெறப்பட்டன. எனினும் தற்போது நாம் செலுத்த வேண்டிய கடன் தொகையை முகாமைத்துவம் செய்து பொருளாதாரத்தை சீரான நிலைமைக்கு கொண்டு வருகின்றோம்.

இந் நிலையில் தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் மாகம்புற, மத்தள போன்று துறைமுக, விமான நிலையங்கள் பல அமைத்திருப்பேன் என ஹிட்லரின் மூத்த சகோதரர் கூறியுள்ளார். எனினும் அவரது ஆட்சி காலத்தின் போது துறைமுகம், விமான நிலையத்தை நிர்மாணிக்க எடுத்த கடனில் இருந்து நாம் இலகுவாக தப்பிக்கொண்டோம்.  

இன்று பாலர் நாட்டை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதாக எம் மீது குற்றம் சுமத்துகின்றனர். எனினும் விற்பது எமது நோக்கமல்ல. அந்நிய செலாவணியை அதிகரிப்பதே எமது நோக்கமாகும். தற்போது சீன மெர்சன்ட் நிறுவனத்தின் வருகையை அடுத்து பல நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளன. 

இந்நிலையில் தற்போது நாம் 2025 இல் வளமான நாடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனூடாக நாட்டின் வருமானத்தை அதிகரித்து வளம் பெறசெய்ய நாட்டு மக்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.