(எம்.சி.நஜிமுதீன்)

மகாண சபைத் தேர்தல் நடத்துமாறுக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் நாடு தழுவிய ரீதியில் கூட்டு எதிரணியினர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அது இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் தற்போது வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதன்படி கடந்த பத்து மாத காலமாக அம் மாகாண சபைகள் செயற்பாட்டில் இல்லை. 

மேலும் இவ் வருடம் செப்டெம்பர் மாதமளவில் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துவிடும்.

எனவே அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து இரு வருடங்களைத் தாண்டும். அவ்வாறெனின் குறித்த மாகாண சபைகள் இரு வருடகாலம் செயற்பாட்டில் இல்லை. இரு வருட காலம் மாகாண சபைகள் செயற்பாட்டில் இல்லாமல் அம் மாகாணங்களை நிர்வகிக்க முடியுமாயின் எதற்காக மாகாண சபை முறையை அவசியம் என்கின்ற பிரச்சினை எழும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராகவே செயற்படுகின்றனர். அம்மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக இல்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா. சம்பந்தனும் நல்லாட்சி அரசாங்கத்தை எவ்வாறாவது முன்னெடுத்துச் செல்வது என்பதையே எதிர்பார்க்கின்றனர்.

எனவே மகாண சபைத் தேர்தல் நடத்துமாறுக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியிலிருந்து நாடு தழுவிய ரீதியில் கூட்டு எதிரணியினர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.