இன்றைய நிலையில் தெற்காசியா மட்டுமல்லாமல் ஏறக்குறைய அனைத்து வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் உள்ள நகரங்கள் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவை விட அதிகளவில் மாசடைந்த காற்று மண்டலத்தால் பாதிக்கப்பட்டு, சூழப்பட்டிருக்கின்றன. 

இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு பக்கவாதம், இதயம் தொடர்பான நோய்கள், நுரையீரல் தொற்று நோய்கள், நுரையீரல் புற்றுநோய்கள், நாட்பட்ட சுவாச கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களின் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 

அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வின் முடிவில் உலகில் உள்ள மக்கள் தொகையில் 91 சதவீத மக்கள் மாசடைந்த காற்றை சுவாசித்து வருவதாக தெரிவிக்கிறது. அதனால் காற்று மாசுபடுவதை தடுக்க அனைத்து அரசமைப்புகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் கைகோர்த்து ஒரணியில் இயங்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள காற்று மண்டலத்தில் மெர்க்குரி, சல்பர் டையாக்ஸைட், நைட்ரஜன் ஓக்ஸைட் போன்ற வேதிப் பொருட்களின் அளவு முன்பைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 

இவை நீர் நிலைப்பகுதிகளிலும் நேரடியாக கலந்திருக்கிறது. இதனால் காற்று மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், திறந்தவெளியில் பணியாற்றுபவர்கள், முதியவர்கள் ஆகியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நகரம் சார்ந்த பகுதியில் வசிப்பவர்கள் விலங்குகளின் சிறுநீர், கழிவுகள், உதிரும் உரோமங்கள் மற்றும் வீட்டிற்குள் புகை பிடிப்பதால் அவர்களும் மாசடைந்த காற்றை சுவாசிக்க நேரிடுகிறது. 

இன்றைய திகதியில் உலகில் மரணமடைந்தவர்களில் 23 சதவீதத்தினர் குறைக்கப்படாத அல்லது கட்டுப்படுத்தப்படாத காற்று மாசின் காரணத்தினாலேயே உயிரிழந்திருக்கிறார்கள் என அதிர்ச்சியான உண்மையையும் உலக சுகாதார நிறுவனம் வெளிப்படுத்தியிருக்கிறது.

இதனை தடுக்கவேண்டும் என்றால் முதலில் சிகரெட் புகைப்பதை முற்றிலுமாக தடுக்கவேண்டும். டீஸல் எரிபொருள் வாகனத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். மெழுகு வர்த்தியையும், ஊதுபத்தியையும் வீடுகளிலும், பணியிடம் மற்றும் அலுவலகங்களில் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அத்துடன் சத்தான காய்கறிகளையும் உணவுகளையும்  தொடர்ச்சியாகவும், நாளாந்தமும் உட்கொள்ளவேண்டும். வீட்டில் செடிகளையும், வசதிப்பட்ட இடத்தில் மரங்களையும் நாற்றி அதனை பேணி பராமரிக்கவேண்டும். இதனை உறுதியாக கடைபிடித்தால் அடுத்த தலைமுறை மாசடைந்த காற்றை சுவாசிக்காமல், சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

டொக்டர் பாக்யராஜ்.

தொகுப்பு அனுஷா.