மன்னார், பேசாலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த இழுவைப்படகுகளில் கடற்படையினர் சல்லடைத் தேடுதலில் ஈடுபட்டனர். இந்தியாவிலிருந்து கடத்தி வரப்படும் போதைவஸ்துக்கள் இதற்குள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே குறித்த தேடுதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று  சோலை  கடற்பரப்பில் இடம்பெற்றது.மன்னார் பேசாலை கடலில் சுமார் எண்பது இழுவைப்படகுகள் தொழிலுக்கு சென்று வந்தபின் இப் பகுதியில் நங்குரமிடப்பட்டு வருவது வழமையாகும். இந்த   இழுவைப்படகுகளிலேயே கடற்படையினர்  சோதனையிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்தியாவில் இருந்து எடுத்து வரப்படும் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கும் இடமாக சில இழுவைப்படகுகள் பயன்படுத்தப்படுவதாக கடற்படையிருக்கு கிடைத்திருக்கும் இரகசிய தகவல்களை அடுத்தே, இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சோதனை நடவடிக்கைக்கு கடற்டையினரின் கண்காணிப்புப் படகு, டோரா படகுகள், மற்றும் சிறிய ரகப் படகுகள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.நேற்று மாலை வரையில் குறித்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.அண்மையில் கொழும்பில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் பேசாலையை சேர்ந்த   இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து கடற்படையினர் இந்த அதிரடி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.