ஐரோப்பிய பலசாலிகளான ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய இரண்டு அணிகளும் இரண்டாம் சுற்றுக்கு செல்வதைத் தீர்மானிக்கும் சவால் மிக்க பி குழு போட்டிகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

இன்றைய இரண்டு போட்டிகளும் ஸ்பெய்ன், போர்த்துக்கல், ஈரான் ஆகிய மூன்று அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டிகளாக அமையவுள்ளன. 

ஏனெனில் மொரோக்கோவிடம் ஸ்பெய்ன் தோல்வி அடைந்து போர்த்துக்கலை ஈரான் வெற்றிகொண்டால் நிகர கோல் முறைமை ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய அணிகளின் இரண்டாம் சுற்று வாய்ப்பை நிர்ணயிக்கும்.

ஸ்பெய்ன் எதிர் மொரோக்கோ

ஸ்பெய்னைப் பொறுத்த மட்டில் மோரோக்கோவிடமிருந்து பாரிய சவாலை  எதிர்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலினிங்க்ராட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டாலும் ஸ்பெய்ன் இரண்டாம் சுற்று வாய்ப்பை பெற்றுவிடும். எனினும் குழுவில் முதலாம் இடத்தை அடைவதற்கு ஸ்பெய்னுக்கு வெற்றி அவசியம் என்பதால் அதற்கான முயற்சியில் ஸ்பெய்ன் இறங்கும்.

மறுபுறத்தில் போர்த்துக்கலுக்கு கடும் சவாலாக விளங்கி 0 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் தோல்வி அடைந்த மொரோக்கோ எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்.

ஈரான் எதிர் போர்த்துக்கல்

சரன்ஸ்க், மோர்டோவியா எரினா விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள ஈரானுக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான பி குழு போட்டி இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் மிகுந்த போட்டியாக அமையப்போகின்றது.

இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பைப் பெறுவதற்கு ஈரானுக்கு வெற்றி தேவைப்படும் அதேவேளை, போர்த்துக்கலுக்கு வெற்றிதோல்வியற்ற முடிவே போதும். 

இந்த இரண்டு அணிகளில் க்றிஸ்டியானோ ரோனால்டோவின் தலைமையிலான போர்த்துக்கல் பலம்வாய்ந்த அணியாகத் தென்படுகின்றபோதிலும் ஈரான் இப் போட்டியை இலகுவில் நழுவ விடும் என எதிர்பார்க்க முடியாது. 

ஸ்பெய்னுக்கு எதிரான போட்டியில் ஒரு சிறு தவறினாலும் அதிர்ஷ்டமின்மையாலும் தோல்வி அடைந்த ஈரான், இன்றைய போட்டியில் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவை இலக்கு வைத்து விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.

பி குழுவுக்கான இரண்டு போட்டிகளும் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகும். 

அணிகள் நிலை குழு பி

அணி வி வெ  ச  தோ பெ   கொ நி  பு   

ஸ்பெய்ன்  2   1  1     0           4      1        +3   4   

போர்த்துக்கல்  2   1  1     0           4      1        +3   4  

ஈரான்  2   1  0     1           1      1          0   3  

மொரோக்கோ  2   0  0     2           0      2         -2   0  

(குறிப்பு: வி: விளையாடிய போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், நி: நிகர கோல்கள், பு: புள்ளிகள்)

(என்.வீ.ஏ.)