ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வரவேற்பு நாடான ரஷ்யா, உருகுவே (ஏ குழு), பிரான்ஸ் (பி குழு), குரோஏஷியா (சி குழு), இங்கிலாந்து, பெல்ஜியம் (ஜீ குழு) ஆகிய ஆறு அணிகள் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன. 

இந் நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறவுள்ள மற்றைய எட்டு அணிகளைத் தீர்மானிக்கும் முதலாம் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

குறிப்பாக நடப்பு சம்பியன் ஜேர்மனி, ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸில், ஐரோப்பிய பலசாலிகளான ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்று முதல் நான்கு தினங்களுக்கு அந்தந்த குழுக்களின் கடைசி இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் நடைபெறும்.

ரஷ்யா எதிர் உருகுவே

ரஷ்யாவும் உருகுவேயும் ஏ குழுவிலிருந்து ஏற்கனவே இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டன. எனினும் இக் குழுவில் முதலாம் இடத்தை அடையப் போகும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதவுள்ளன. 

இதன் காரணமாக சமாரா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டி விறுவிறுப்பை தோற்றுவிக்கவுள்ளது. மேலும் ரஷ்ய இரசிகர்கள் அரங்கில் பெருமளவில் குவிவார்கள் என்பதால் உருகுவே சற்று அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

தனது சொந்த நாட்டில் முதலிரண்டு போட்டிகளில் எவ்வித சிரமுமின்றி சவூதி அரேபியாவையும் எகிப்தையும் வெற்றிகொண்ட் ரஷ்யா, இன்றைய தினம் உருகுவேயிடம் கடும் சவாலை எதிர்கொள்ளவுள்ளது.

எகிப்து எதிர் சவூதி அரேபியா

ஆறுதல் வெற்றிக்காக எகிப்தும் சவூதி அரேபியாவும் வொல்கோக்ரட் விளையாட்டரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. 

பெரும்பாலும் இப் போட்டியில் எகிப்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும். 

அணிகள் நிலை ஏ குழு

அணி வி வெ தோ பெ கொ நி பு  

ரஷ்யா                           2 2 0 0 8 1 +7 6   

உருகுவே           2 2 0 0 2 0 +2 6  

எகிப்து                          2 0 0 2 4 -3 0  

சவூதி அரேபியா    2 0 0 2 0 6 -6 0  

(குறிப்பு: வி: விளையாடிய போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், நி: நிகர கோல்கள், பு: புள்ளிகள்)

(என்.வீ.ஏ.)