(ரா,கலைச்செல்வன்)

நாடு தழுவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து, இடம்பெற்று வரும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக  தாம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு அஞ்சல்  மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு நகரின் பிராதான அஞ்சல் அலுவகத்திற்கு  முன்னாள் இடம்பெற்றது.

12 வருடங்களாக இருந்து வரும்  அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு, 5 வருடங்களாக கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்,  கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய், ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த அமைச்சரவை பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு, 2012 பொறுப்புப் பரீட்சையை நடைமுறைப்படுத்து, பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக வழங்கு, விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு போன்ற  கோசங்களை எழுப்பியவாறு  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி முதல் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தினால் அஞ்சல் சேவையை பெறுவதில்  மக்கள் தொடர்ந்தும் பிரச்சனைகளை எதிர் நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.