தென் கொரியாவுக்கு எதிரான ஜீ குழு போட்டியில் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்டையில் வெற்றிபெற்ற மெக்சிகோ, இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பை ஓரளவு அதிகரித்துக்கொண்டுள்ளது. 

அது பெனல்டி அல்லவெனவும் கீழே வீழ்ந்த ஹியுன்சு ஜேங்கின் (இல.20) கையில் பந்து தற்செயலாக பட்டதெனவும் தென் கொரிய வீரர்கள் தெரிவித்தபோதிலும் சேர்பிய மத்தியஸ்தர் மிலோரட் மெசிச் தனது முடிவை மாற்றவில்லை.ரொஸ்டோவ் எரினா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற ஜீ குழு போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனல்டியை கார்லோஸ் வேலா, கோலாக்கியதன் மூலம் மெக்சிகோ முன்னிலை பெற்றது.இந்தக் கோல் தென் கொரியாவுக்கு பேரிடியைக் கொடுத்தது. ஆனால் தென் கொரிய வீரர்கள் விடாமுயற்சியுடன் ஆளுக்கு ஆள் என்ற வியூகத்துடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர்.மறுமுனையில் மெக்சிகோ வீரர்களும் வெகம் கலந்த வியூகத்துடன் விளையாடினர். இந்த இரண்டு அணிகளதும் விளையாட்டு பல சந்தர்ப்பங்களில் பார்வையாளர்களைப் பரபரப்பில் ஆழ்த்தியது.

இடைவேளையின்போது 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்த மெக்சிகோ, 66ஆவது நிமிடத்தில் ஜேவியர் ஹேர்னெண்டஸின் தனி முயற்சியால் இரண்டாவது கோலைப் போட்டது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இதே திகதியில் (ஜூன் 23) குரோஏஷியாவுக்கு எதிரான போட்டியில் ஹேர்னெண்டெஸ் கோல் போட்டிருந்தார். இது ஓர் அபூர்வ நிகழ்வாகும்.

மெக்சிகோவின் இரண்டாவது கோலைத் தொடர்ந்து தென் கொரியா உத்வேகத்துடன் விளையாடி கொல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தது.

இறுதியாக உபாதையீடு நேரத்தின் 3ஆவது (90+3)நிமிடத்தில் தென் கொரிய வீரர் ஹியங் மின் சொன், சுமார் 20 யார் தூரத்திலிருந்து இடது காலால் உதைத்த பந்து வளைந்து சென்று மெக்சிக்கோவின் கோலினுள் தஞ்சம் புகுந்தது.

இந்த கோல் தென் கொரியாவுக்கு ஆறுதலைக் கொடுத்தபோதிலும் அது காலம் கடந்து பெற்ற கோலாக அமைந்தது. அத்துடன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த தென் கொரியாவின் இரண்டாம் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

(என்.வி.ஏ.)