சிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஈராகின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை ஈராக் ராணுவம் முற்றிலுமாக ஒடுக்கி நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இந்நிலையில், அங்கிருந்து அகன்று சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற தீவிரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சிரியாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய மூன்று வீடுகளின் மீது ஈராக் போர் விமானங்கள் நேற்றிரவு தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் போர்துறை அதிகாரி, ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உட்பட 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.