(நா.தனுஜா)

ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக தயான் ஜயதிலகவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். 

உயர் அதிகார நியமனம் தொடர்பான பாராளுமன்றக் குழுவிற்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்படி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச ரீதியான இராஜதந்திரத் தொடர்புகளைப் பொறுத்தவரையில் இலங்கை உயர்வான தரத்தினைப் பேணிவருவதுடன் சர்வதேச ரீதியில் மதிக்கப்படுவதுமான வரலாற்றினைக் கொண்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியாக பதவி வகித்த தயான் ஜயதிலகவின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அளிக்கின்றன. எனவே ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவராக பரிந்துரை செய்யப்பட்டுள்ள தயான் ஜயதிலகவின் பெயர் நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உயர் அதிகாரம் தொடர்பான பாராளுமன்றக் குழுவினால் ஆண்டு கடந்த 12 ஆம் திகதியிட்டு வெளியிடப்பட்ட பொதுவான அறிக்ககையிலேயே மேற்படி பெயர் பரிந்துரை இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.