(நெவில் அன்தனி)

ஆரம்பப் போட்டியில் மெக்சிகோவிடம் அடைந்த தோல்வியை அடுத்து நடப்பு உலக சம்பயின் ஜேர்மனி, இன்று இரவு நடைபெறவுள்ள சுவீடனுக்கு எதிரான போட்டியை கடும் அழுத்தத்துக்கு மத்தியில் எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான ஜீ குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இப் போட்டி முக்கியம் வாய்ந்ததாக அமைவதால் கால்பந்தாட்டத்தில் அதி சிறந்த ஆற்றல்களை இன்று இரவு காணக்கூடியதாக இருக்கும்.

இரண்டாம் சுற்றுக்கான தகுதியைப் பெறுவதற்கு ஜேர்மனிக்கு இரண்டு வெற்றிகள் தேவைப்படுகின்றது.. ஆனால் சுவீடனுக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றிதான் தேவை. எனவே இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரண்டு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஜேர்மனியும் சுவீடனும் சர்வதேச அரங்கில் ஒன்றையொன்று 36 தடவைகள் எதிர்த்தாடியுள்ளன. இதில் 15 க்கு 12 என்ற ஆட்டக் கணக்கில் ஜேர்மனி முன்னிலையில் இருக்கின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் இன்றைய போட்டி பெரும் பரபரப்பில் ஆழ்த்தும் என நம்பப்படுகின்றது. 

சுவீடனுடனான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளிலும் ஜேர்மனி 3 க்கு 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

அணிகள் விபரம்

ஜேர்மனி: மெனுவல் நோயர், ஜொஷுவா கிமிச், ஜெரோம் போயடெங், நிக்லோஸ் சுலே, ஜோனாஸ் ஹெக்டர், இல்கே குண்டோகன், டொனி க்ரூஸ், தோமஸ் முல்லர், மேசுட் ஓஸில், மார்க்கோ ரெயஸ், மரியோ கோமஸ்.

சுவீடன்: ரொபின் ஒல்சென், மைக்கல் லஸ்டிக், விக்டர் லிண்டேலொவ், அண்ட்ரெஸ், க்ரான்க்விஸ்ட், லுட்விக் ஒகஸ்டின்சன், விக்டர் க்லேசன், செபெஸ்டியன் லார்சன், அல்பின் எக்டால், எமில் போர்ஸ்பேர்க், மார்க்கஸ் பேர்க், ஓலா டொல்வோனென்