(நெவில் அன்தனி)

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் ஏழாவது தடவையாக இரண்டாம் சுற்று வாய்ப்பை பெறும் எண்ணத்துடன் தென் கொரியாவை ஜீ குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் மெக்சிகோ சந்திக்வுள்ளது.

தனது ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் ஜேர்மனியை தோல்வி அடையச் செய்த மெக்சிகோ, ரொஸ்டொவ் எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் தென் கொரியாவை எதிர்த்தாடுகின்றது.

இந்தப் போட்டியில் மெக்சிகோ வெற்றிபெற்றால் இக் குழுவிலிருந்து முதலாவது அணியாக இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும்.

ஆசிய நாடுகளுக்கு எதிராக விளையாடி 3 சந்தர்ப்பங்களிலும் வெற்றியீட்டியுள்ள மெக்சிகோ, 1998 பிரான்ஸ் உலகக்  கிண்ணப் போட்டியில் தென் கொரியாவை 3 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டிருந்தது.

மேலும் ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் தடுத்தாடுவதிலும் எதிர்த்தாடுவதிலும் சிறந்த வியூகங்களுடன் விளையாடிய மெக்சிகோவுக்கு இன்றைய போட்டி சிரமத்தைக் கொடுக்காது எனக் கருதப்படுகின்றது.

சுவீடனுக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய தென் கொரியா, இன்றைய போட்டியில் வெற்றிபெறவேண்டுமானால் அதிசயிக்கத்தக்க ஆட்டத் திறனை வெளிப்படுத்த வேண்டிவரும். 

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றுகளில் கடைசியாக விளையாடிய ஏழு போட்டிகளில் வெற்றிபெறத் தவறியுள்ள தென் கொரியா இன்றைய போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்க முடியாது. 

அணிகள் விபரம்

மெக்சிகோ: கில்லோ ஒச்சோஆ, கார்லொஸ் சல்சிடோ, ஹியூகோ அயாலா, ஹெக்டர் மொரினோ, ஜீசஸ் கலார்டோ, மிகெல் லயுன், ஹெக்டர் ஹெரேரா, அண்ட்ரெஸ் குவார்டாடோ, கார்லொஸ் வேலா, ஜேவியர் ஹேர்னெண்டஸ், ஹேர்விங் லொஸானோ.

தென் கொரியா: ஜோ ஹியொன்வூ, லீ யொங், கிம் யங்வொன், ஜெங் ஹியுன்சூ, கிம் மின்வூ, கி சுங்யெங், ஜுங் வூயங், லீ ஜேசுங், ஹ்வாங் ஹீச்சான், சொன் ஹெயுங்மின், லீ செயுங்வூ.