(லியோ நிரோஷ தர்ஷன்)

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். ஆகவே செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது என கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

செயற்கை தீவின் உரிமை விவகாரத்தில் சீனாவின் பிடிவாதத்தை இலங்கை அரசாங்கம் தகர்த்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் செயற்கை தீவின் கட்டுப்பாடும் இலங்கை கடற்படையின் வசமே இருக்கும். அநாவசியமான சந்தேகங்களை தவிர்க்கும் வகையில் துறைமுகப் பகுதியில் புதிதாக அலைதாங்கி தடுப்புகள் என்பன அமைக்கப்படும்.

சீனாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் செயற்கைத் தீவை கொடுப்பதாக எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த செயற்கை தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது. 

அது மாத்திரம் அல்ல அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும்  கைத்தொழில் வலயம் உள்ளிட்ட அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து நிலம், வான் மற்றும் கடல் பிரதேசங்களின் பாதுகாப்பு முழுமையாக இலங்கை கடற்படை வசமாகவே இருக்கும் என்றார்.