கொஸ்டாரிக்காவுக்கு எதிராக செய்ன்ற் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற ஈ குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் உபாதையீடு (இஞ்சரி டைம்) நேரத்தில் போடப்பட்ட இரண்டு கோல்களின் உதவியுடன் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது பிரேஸில் .

சுவிட்சர்லாந்துடனான தனது ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதால் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் கொஸ்டா ரிக்காவை இன்றைய போட்டியில் பிரேஸில் எதிர்கொண்டது.

தரவரிசையில் 23ஆம் இடத்திலுள்ள கொஸ்டா ரிக்காவை மிக இலகுவாக பிரேஸில் வென்றுவிடும் என்றே போட்டிக்கு முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. 

ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கு இந்த வெற்றி இலகுவாக வந்து சேரவில்லை. போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இதன் காரணமாக இன்றைய தினமும் பிரேஸிலுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுமோ என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால் உபாதையீடு நேரத்தின் முதலாவது நிமிடத்தில் பிலிப்பே கூட்டின்ஹோவும் ஏழாவது நிமிடத்தில் நேமாரும் கோல்களைப் போட்டு பிரேஸிலுக்கு மிக மிக அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

போட்டியின் 91ஆவது (90+1) நிமிடத்தில் கோல் பகுதியை நோக்கி ரொபர்ட்டோ பேர்மினோ தலையால் தட்டிய பந்தைக் கட்டுப்படுத்துவதில் கேப்றியல் ஜீசஸ் தடுமாற்றம் அடைந்தார். ஆனால் உரிய நேரத்தில் உரிய இடத்துக்கு ஓடிய பிலிப்பே கூட்டின்ஹோ மிகவும் சாதுரியமாக பந்தை கோலினுள் புகுத்தினார். அந்த கோலுடன் அரங்கில் குழுமியிருந்த பிரேஸில் இரசிகர்கள் ஆரவாரத்துடன் கரகோஷம் செய்து தமது அணியை பாராட்டி வாழ்த்தினர்.

ஆறு நிமிடங்கள் கழித்து (90+7) டக்ளஸ் கொஸ்தா பரிமாறிய பந்தை முறையாக கட்டுப்படுத்திய நேமார், எதிரணியின் பின்கள வீரர் ஒருவரை கடந்துசென்று தனக்கே உரித்தான பாணியில் பிரேஸிலின் இரண்டாவது கோலைப் போட்டார்.

சரியாக 90 நிமிடங்களில் கோல் போட முடியாமல் போனதால் கவலை அடைந்த நட்சத்திர வீரர் நேமாருக்கும் பிரேஸிலுக்கும் உபாதையீடு நேர கோல்கள் உயிரூட்டியதுடன் பேரானந்தத்தில் மிதக்கவும் செய்தன.

இப் போட்டியில் பலம்வாய்ந்த பிரேஸில் அணியை 90 நிமிடங்களுக்கு கட்டுப்படுத்திய கோஸ்டா ரிக்கா, கடைசி நேரத்தில் அடைந்த தோல்வியுடன் இரண்டாம் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 

(என்.வீ.ஏ.)