(எம்.நியூட்டன்)

முழு இலங்கையினதும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தற்போது வட மாகாணத்தின் நிலைமை என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு கடல்வள பாதுகாப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் தெரிவித்தார்.

முதற்தடவையாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் யாழ். விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

 யாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயம் மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்விஜயத்தின் போது இலங்கை பிரதிநிதிகளுடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வட மாகாணத்தின் தற்போதைய நிலை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.  அத்தோடு கடல்வளம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு, சுத்திகரிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

 கடல்வளம் என்பது இன்றியமையாததாகும். அதன்மூலமாக எரிபொருள் பெறப்படுகின்றது. அது மட்டுமன்றி சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவே கடல்வளத்தை பாதுகாத்தல், அதனை தூய்மையாகப் பேணுதல் என்பன தொடர்பில் நோர்வே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

 கடல்வளத்தை பாதுகாப்பதற்கான நோர்வேயின் சர்வதேச அளவிலான பங்களிப்பாக 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை நோர்வே அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதன்மூலம் கடல் மற்றும் சுற்றாடல் மாசுபாடு என்பவற்றைக் குறைக்க முடியும்.

 மேலும் இங்கு புதிதாக பழங்களைப் பொதி செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளேன். இதன்மூலம் 200 குடும்பங்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் என்பதுடன், இது இலங்கையின் பொருளாதார வலுப்படுத்தலுக்கும் பங்களிப்புச் செய்யும் என்றார்.