(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

கிளிநொச்சியில் சிறுத்தையைக் கொடூரமாக அடித்துக்கொலை செய்த  சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, கிளிநொச்சியில் இளைஞர்கள் குழுவொன்றால் சிறுத்தையொன்று கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து  வனஜீவராசிகள் அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ள  நடவடிக்கை என்னவென்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சியில் நடைபெற்றது இரக்கமற்ற செயலாகும். வெளிநாடொன்றில் நடைபெற்ற சம்பவம் ஒன்றாக இருக்கும்  என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இலங்கையில் தான்  அந்த கொடூரம் அரங்கேறியுள்ளது என்பது பின்னர் நான் அறிந்துகொண்டேன்.  

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைதுசெய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றார்.