(நெவில் அன்தனி) 

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் டி குழுவில் இடம்பெறும் முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனாவின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடியதென கருதப்படும் ஐஸ்லாந்துக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

இப் போட்டி வோல்கோக்ரட் விளையாட்டரங்கில் இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் ஆர்ஜன்டீனாவுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு முழு உலகையும் பிரமிக்கவைத்த ஐஸ்லாந்து இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் பெரும்பாலும் இரண்டாம் சுற்றுக்கான வாயிலை நெருங்கும். ஏனெனில் ஆர்ஜன்டீனாவுக்கு 3 மறை கோல்கள் இருப்பது அவ்வணிக்கு பாதகமாக அமைகின்றது.

இக் குழுவிலிருந்து ஏற்கனவே குரோஏஷியா இரண்டாம் விளையாட தகுதிபெற்றுவிட்ட நிலையில், இரண்டாம் இடத்தைக் குறிவைத்து ஐஸ்லாந்து இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. ஆர்ஜன்டீனாவுடனான போட்டியில் மெசியின் பெனல்டியை தடுத்து நிறுத்தி ஐஸ்லாந்தை காப்பாற்றிய கொல்காப்பாளர் ஹெனெஸ் ஹோல்டர்சன்  இன்றும் பிரதான பங்காற்றவுள்ளார்.

இதேவேளை குரோஏஷியாவிடம் அடைந்த தோல்வியை அடுத்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நைஜீரியா இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் முதல் சுற்று நிறைவில் நாடு திரும்ப வேண்டிவரும். 

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நைஜீரியா 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவுக்கு எதிராக 2014 உலகக் கிண்ணப் போட்டியில் மாத்திரமே நைஜீரியா வெற்றிபெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் நைஜீரியாவுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கமுடியாது.

ஐஸ்லாந்தும் நைஜீரியாவும் ஒன்றையொன்று சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

அணிகள் விபரம்

ஐஸ்லாந்து: ஹெனெஸ் ஹோல்டோர்சன், பேர்க்கிர் சேவர்சன், காரி ஆர்னாசன், ராஞ்ஞர் சிகேர்ட்சன், ஹோர்டர் மாஞ்ஞசன், எமில் ஹோல்ப்ரெட்சன், ஆரொன் குணார்சன், கிவி சிகேர்ட்சன், பெர்க்கிர் பிஜார்னசன், ரூரிக் ஜிஸ்லோசன், அல்ப்ரட் பின்போகசன்.

நைஜீரியா: பிரான்சிஸ் உஸோஹோ, அப்துல்லாஹி ஷேஹு, வில்லியம் ட்ரூஸ்ட் எகொங், லியொன் பெலோகன், ப்றயன் இதோவு, வில்ப்ரட் எண்டிடி, ஜோன் ஓபி மைக்கல், ஒகேநெக்காரோ ஈட்டிபோ, விக்டர் மோசஸ், ஒடியொன் இக்ஹாலோ, அலெக்ஸ் இவோபி.