(நெவில் அன்தனி )

நான்கு வருடங்களுக்கு முன்னர் சொந்த நாட்டில் சோடை போன பிரேஸிலின் ரஷ்ய பிரவேசத்தின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு அமையாத நிலையில், இன்றைய தினம் ஈ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் கொஸ்டா ரிக்காவை சந்திக்கவுள்ளது.

இப் போட்டி செய்ன்ற் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இக் குழுவில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட பிரேஸில் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் கொஸ்டா ரிக்காவை எதிர்த்தாடவுள்ளது.

ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலின் கடந்த இரண்டு உலகக் கிண்ண பெறுபேறுகள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை. 

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதால் இரண்டு அணிகளும் என்ன விலை கொடுத்தேனும் வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கும் என நம்பப்படுகின்றது.

எவ்வாறாயினும் பிரேஸிலுக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. தனது ஆரம்பப் போட்டியில் சேர்பியாவிடம் ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கொஸ்டா ரிக்காவிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றே கூறத் தோன்றுகின்றது.

உலகக் கிண்ணப் போட்டியில் இதற்கு முன்னர் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் பிரேஸிலுக்கு வெற்றி கிடைத்தது. ஒட்டுமொத்தமாக  10 தடவைகள் இந்த அணிகளும் மோதியதில் ஒரே ஒரு தடவை மாத்திரம் 1960 இல் பான் அமெரிக்கன் போட்டியில் கொஸ்டா ரிக்கா வெற்றிபெற்றிருந்தது.

அணிகள் விபரம்

பிரேஸில்: அலிசன், டெனிலோ, தியகோ சில்வா, மிரண்டா, மார்செலோ, கெசேமிரோ, பௌலின்ஹோ, வில்லியன், பிலிப்பே கூட்டின்ஹோ, நேமார், கேப்ரியல் ஜீசஸ்.

கொஸ்டாரிக்கா: கேலர் நவாஸ், பிரான்சிஸ்கோ கெல்வோ, ஒஸ்கார் டுவார்ட்டே, ஜொனி அக்கொஸ்டா, ஜியான்கார்லோ கொன்ஸாலஸ், க்றிஸ்டியன் கெம்போவா, செல்சோ போர்ஜஸ், டேவிட் குஸ்மான், ப்றயன் ருய்ஸ், ஜோஹான் வெனிகாஸ், மார்க்கோ யுரெனா