கோல்காப்பாளர் வில்லி கெபெல்லேரோவினால் இழைக்கப்பட்ட மிக மோசமான தவறு குரோஷியாவின் வெற்றிக்கு வழிவகுக்க, 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாம் சுற்றுடன் வெளியேறும் அபாயத்தை ஆர்ஜன்டீனா எதிர்கொண்டுள்ளது.

நிஸ்னி நொவ்கோரொட் விளையாட்டரங்கில் நேற்று வியாழன் இரவு நடைபெற்ற இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான டி குழு போட்டியில் 3 க்கு 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் குரோஷியா அபார வெற்றியீட்டியது. 

ஏற்கனவே நைஜீரியாவை வெற்றிகொண்ட குரோஏஷியா இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இரண்டாவது தடவையாக 16 அணிகள் சுற்றில் விளையாட தகதிபெற்றுக்கொண்டது.

இம் முறை உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கன்னிப் பிரவேசம் செய்த ஐஸ்லாந்துடான போட்டியை வெற்றிதோல்வியின்றி (1-1)முடித்துக்கொண்ட ஆர்ஜன்டீனாவின் இரண்டாம் சுற்று வாய்ப்பு அற்றுப் போகும் நிலை தோன்றியுள்ளது.

போட்டியின் முதலாவது பகுதியில் ஆர்ஜன்டீனாவின் எதிர்த்தாடும் வியூகங்களை முறியடிக்கும் வகையில் குரோஏஷியா தடுத்தாடும் முறைமையைப் பின்பற்றியது. என்றாலும் அவ்வப்போது எதிர்த்தாடி ஆர்ஜன்டீனாவுக்கு அச்சத்தைத் தோற்றுவித்த வண்ணம் இருந்தது. 

போட்டியின் முதலாவது பகுதியில் சற்று நிலைதடுமாறியவராக காணப்பட்ட ஆர்ஜன்டீனாவின் நட்சத்திர வீரரும் அணித் தலைவருமான லயனல் மெசி, தனக்கு கிடைத்த கோல் போடும் வாய்ப்புகளைப் பூரணப்படுத்த தவறினார்.

இடைவேளையின் பின்னர் ஆர்ஜன்டீனாவைவிட திறமையாக விளையாடிய குரோஷியா கோல் போடுவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்த வண்ணம் இருக்க, ஆர்ஜன்டீனா தடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

போட்டியின் 53 ஆவது நிமிடத்தில் தனது பின்கள வீரர் ஒருவர் பரிமாறிய பந்தை ஆர்ஜன்டீனா கோல்காப்பாளர் வில்லி கெபெல்லேரோ எதிர்த்திசைக்கு உதைக்க முற்பட்டார். ஆனால் அந்த உதையில் போதிய வலு இல்லாததால் பந்து சில அடிகள் மாத்திரமே முன்னோக்கிச் சென்றது.

அந்த சந்தர்ப்பத்தில் குரோஷிய வீரர் அன்டே ரெபிக் துரிதமாக செயற்பட்டு ‘வொலி’ முறையில் பந்தை பின்னோக்கி உதைத்து ஆர்ஜனடீன கோலினுள் புகுத்தினார்.

இதனைத் தொடர்ந்த ஆர்ஜன்டீனா அடைந்த தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட குரோஷியா ஆக்ரோஷத்துடன் விளையாட ஆரம்பித்தது. இதன் காரணமாக இரண்டு அணி வீரர்களும் முட்டி மோதிய வண்ணம் விளையாடியதால் மத்தியஸ்தர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு பல வீரர்கள் உள்ளாகினர். 

போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் மார்செலோ ப்ரோஸோவிக் பரிமாறிய பந்தை, பெனல்டி எல்லைக்கு வெளியில் இருந்து லூக்கா மொட்ரிக் மிகப் பலமாக உதைக்க, அப் பந்து ஆர்ஜன்டீன கோலின் வலது கீழ்ப் பகுதி ஊடாக உள்ளே சென்றது.

தொடர்ந்து உபாதை ஈடு நேரத்தை (இஞ்சரி டைம்) ஆட்டம் தொட்டபோது, கடுகதி வேகத்தில் பந்துபரிமாற்றத்தில் ஈடுபட்ட குரோஷியா மூன்றாவது கோலைப் போட்டது. அந்த சந்தர்ப்பத்தில் ஆர்ஜன்டீன கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை பயன்படுத்தி மெட்டியோ கொவாசிக் பரிமாறிய பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு ஐவன் ரக்கிடிக் மிக இலகுவாக கோலாக்கினார்.

இந்தப் போட்டியில் உஸ்பெக்கிஸ்தான் மத்தியஸ்தர் ரவ்ஷான் ஏர்மெட்டோவினால் 7 வீரர்களுக்கு மஞசள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று நடைபெறவுள்ள ஐஸ்லாந்துக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான டி குழு போட்டியில் யார் வெற்றிபெற்றாலும், ஆர்ஜன்டீனா தனது கடைசிப் போட்டியில் நைஜீரியாவை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டால் மாத்திரமே இரண்டாம் சுற்றக்கு செல்லும் வாய்ப்பை பெறமுடியும்.

 (என்.வீ.ஏ.)