(எம்.எம்.எஸ்)

மகளிருக்கான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கிலாந்து அணி 250 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சர்வதேச ஒரு நாள்  கிரிக்கெட் போட்டிகளில் அதிக மொத்த ஓட்டங்களுக்கான உலக சாதனை  (50 ஓவர்களில் 490/4)  நியூஸிலாந்து மகளிர் அணியினரால் நிலைநாட்டப்பட்ட நிலையில்,  மகளிருக்கான சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இங்கிலாந்து அணி இந்த சாதனையை படைத்துள்ளது.

இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய மகளிர் அணிகள் பங்குபற்றும் மும்முனை சர்வதேச இருபதுக்கு 20 தொடர் இங்கிலாந்தின் டோன்டனில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் போட்டியில் தென் ஆபிரிக்கா  அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 216 ஓட்டங்களை  பெற்று மகளிருக்கான சர்வதேச இருபதுக்கு 20 கிரிககெட்டில் மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை படைத்தது. 

இதில் நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸ் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்களைக் குவித்தார். இப்பபோட்டியில் நியூஸிலாந்து  66 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட சில மணி நேரத்தில் மாலை வேளையில் இதே மைதானத்தில் தென் ஆபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி  20  ஓவர்களில் 3 விக்கெட்டுக்ளை இழந்து 250 ஓட்டங்களை பெற்று நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.

துடுப்பாட்டத்தில் டெமி போமன்ட் 52 பந்துகளில் 18 பவுண்ட்றி, 4 சிக்ஸர்கள் அடங்கலாக 116 ஓட்டங்களை குவித்தார். அத்துடன் டெனி வியாட் 56 ஓட்டங்களையும், கெத்தரின் ப்ரன்ட் 42 ஓட்டங்களை குவித்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க மகளிர் அணி  20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்று  121 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இது ஓட்டங்கள் ரீதியாக பதிவான மிகப்பெரிய வெற்றி ஆகும்.