சமாரா விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற டென்மார்க்குடனான சி குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை அவுஸ்திரேலியா 1 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் .வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இந்தப் போட்டி முடிவானது இரண்டாம் சுற்றுக்கு தெரிவாக முடியும் என்ற சொற்ப நம்பிக்கையை அவுஸ்திரேலியாவுக்கு கொடுத்துள்ளது. ஆனால் பிரான்ஸும் டென்மார்க்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் அல்லது அப் போட்டிகளை சமப்படுத்திக் கொண்டால் அவுஸ்திரேலியாவின் வாய்ப்பு அற்றுப் போகும்.

தற்போது இக் குழுவில் 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்திலும் இரண்டாவது போட்டியில் விளையாடிவரும் பிரான்ஸ் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு 2 போட்டிகளில் ஒரு புள்ளி மாத்திரமே கிடைத்துள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கிய டென்மார்க், அதற்கமைய போட்டியின் 7ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் போட்டது. 

அவுஸ்திரேலிய வீரர் ஆரொன் மூய் தனது எல்லையிலிருந்து பந்தை முன்னோக்கி நகர்த்தியபோதிலும் நிக்கலாய் ஜோர்ஜென்சென் பந்தை தன்பாதத்தால் கட்டுப்படுத்தி க்றிஸ்டியன் எரிக்செனுக்கு மிக நேர்த்தியாக பரிமாறினார்.

தன்னை நோக்கி வந்து பந்து நிலத்தில் பட்டு சற்று மேலெழுந்தபோது எரிக்சன் ‘ஹாவ் வொலி’ முறையில் பந்தை உதைத்து அலாதியான கொல் ஒன்றைப் போட்டார். 

இதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு டென்மார்க்குக்கு கிடைத்த வாய்ப்பு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் டென்மார்க்கினால் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியாமல் போனது.

இந் நிலையில் பிரான்ஸுடனான போட்டியில் போன்றே இப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவுக்கு பெனல்டி ஒன்று கிடைத்தது.

போட்டியின் 36ஆவது நிமிடத்தில் மெத்யூ லெக்கி தலையால் தட்டிய பந்து டென்மார்க் பின்கள வீரர் யுசுவ் பௌல்செனின் கையில் பட்டதை மத்தியஸ்தர் அன்டோனியோ மத்தேயு லொஹொஸ் கவனிக்கத் தவறிவிட்டார்.

ஆனால் வீடியோ உதவி மத்தியஸ்தர் சுட்டிக்காட்டியதை அடுத்து அவுஸ்திரேலியாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. 37ஆவது நிமிடத்தில் பெனல்டியை உதைத்த மய்ல் ஜெடிநாக் அதை கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதுவரை 57 நிமிடங்களுக்கு ஒரு கோலைத் தானும் விட்டுக்கொடுக்காமலிருந்த டென்மார்க் கோல்காப்பாளர் கஸ்பர் ஷுமைக்கலால் பெனல்டியைத் தடுக்க முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து டென்மார்க்குக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. ஆனால் கோல் போடுவதற்கான சரியான வாய்ப்புகளை அவுஸ்திரேலியாவினால் உருவாக்க முடியவில்லை.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் டெனியல் அர்ஸானி, மெத்யூ லெக்கி ஆகியோரின் முயற்சிகளை டென்மார்க் கோல்காப்பாளர் சாமர்த்தியமாக செயற்பட்டு தடுத்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.