சட்டரீதியாகவும் சட்டவிரோதமாகவும் பொதுமக்களில் அதிகமானோர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா.வின் ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐ.நா. சபை சார்பில் பாதுகாப்புத் துறை நிபுணர் ஆரோன் கார்ப் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த 2017 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி உலகளாவிய ரீதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளன. இதில் பொதுமக்களிடம் 85.7 கோடி துப்பாக்கிகளும் இராணுவ வீரர்களிடம் 13.3 கோடி துப்பாக்கிகளும் பொலிஸாரிடம் 2.27 கோடி துப்பாக்கிகளும் உள்ளன. 

இதற்கிணங்க சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் பொதுமக்களில் அதிகமானோர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளின்  வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும் (அமெரிக்காவில் 39.3 கோடி மக்களிடம் துப்பாக்கிகள்), இரண்டாவது இடத்தில் இந்தியாவும் (இந்தியாவில் 7.11 கோடி மக்களிடம் துப்பாக்கிகள்), சீனா மூன்றாவது இடத்திலும்  (சீன மக்களிடம் 4.97 கோடி துப்பாகிகள்) உள்ளது.  

எந்த நாட்டு இராணுவத்தினரிடம் அதிகம் துப்பாக்கிகள் உள்ளன என்பது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்திலும் சீனா இரண்டாமிடத்திலும் வடகொரியா மூன்றாமிடத்திலும் உக்ரைன் நான்காமிடத்திலும்  அமெரிக்கா ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

அது போல் எந்த நாட்டு பொலிஸாரிடம் அதிக துப்பாக்கிகள் உள்ளன என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ரஷ்யா முதலிடத்திலும் சீனா, இந்தியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.