கஸான் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற பி குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கட்டாய வெற்றிக்காக போட்டியிட்ட ஈரான், ஸ்பெய்ன் ஆகிய அணிகளில் அதிர்ஷ்ட கோல் ஒன்றின் மூலம் ஸ்பெய்ன் வெற்றிபெற்றது.

போட்டியின் 54ஆவது நிமிடத்தில் தனது கோலுக்கு அருகாமையில் வைத்து ஈரான் பின்கள வீரர் ரமின் ரிஸேயான் திசை திருப்புவதற்காக பந்தை உதைத்த போது டியகோ கொஸ்டாவின் வலது முழங்காலுக்கு சற்று கீழே பட்ட பந்து ஸ்பெய்னின் அதிர்ஷ்டவசமான கோலாக மாறியது.

போட்டியின் ஆரம்பம் முதல் ஸ்பெய்ன் எதிர்த்தாடும் ஆற்றலை வெளிப்படுத்திய அதேவேளை, ஈரான் தடுத்தாடும் முறைமையைப் பின்பற்றியது.

ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கோல் போடுவதற்கு ஸ்பெய்ன் பத்து முயற்சிகளை எடுத்த அதேவேளை, ஈரானுக்கு இரண்டு சந்தர்ப்பங்களே கிடைத்தன. பல சந்தர்ப்பங்களில் ஸ்பெய்னின் முயற்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஈரான் பின்வரிசையில் 6 வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இடைவேளையின் பின்னர் ஸ்பெயன் 7 முயற்சிகளையும் ஈரான் 3 முயற்சிகளையும் எடுத்தன.

போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா ‘பைசிக்கிள் கிக்’ முறையில் கோல் போட முயற்சித்தபோதிலும் பந்து கோலின் குறுக்குக் கம்பத்துக்கு மேலாக சென்றது.

ஆட்டம் இடைவேளைக்கு நிறுத்தப்பட்டபோது எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.

இடைவேளையின் பின்னர் ஆட்டத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இரண்டு அணியினருமே எதிர்த்தாடும் வியூகங்களுடன் விளையாட ஆரம்பித்தனர்.

53 ஆவது நிமிடத்தில் ஈரான் வீரர் கரிம் அன்சாரிபார்டின் வலது பாதத்தினால் உதைத்த பந்து ஸ்பெய்ன் கோலுக்கு மிக அருகாமையில் இடதுபுறமாக வெளியே சென்றது.

அடுத்த நிமிடம் ஸ்பெய்ன் வீரர் டியகோ கொஸ்டா கோல் போட எடுத்த முயற்சியைத் தடுக்கும் வகையில் இரண்டு ஈரான் வீரர்கள் அவரை இருபுறமாக சுற்றிவளைத்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ராமின் ரிஸெயான் பந்தை திசைதிருப்புவதற்காக வேகமாக உதை்தார். ஆனால் டியகோ கொஸ்டாவின் வலது முழங்கால் பகுதியில் பட்ட பந்து ஈரான் கோலினுள் வேமாக உருண்டு சென்றது. ஈரான் கோல் காப்பாளர் அலி பெய்ரான்வந்தினால் அதனைத் தடுக்க முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்துவதற்கு ஈரான் கடுமையாக முயற்சித்தது. 

போட்டியின் 62 ஆவது நிமிடத்தில் சர்தார் அஸ்மூன் தலையால் தட்டிய பந்தை ஈரானின் கோலினுள் சய்யத் எஸாத்தொல்லாஹி புகுத்தினார். உடனடியாகவே ஈரான் வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். ஆனால் சய்யத் எஸாத்தொல்லாஹி ஓவ் சைட் நிலையிலிருந்து கோல் போட்டதாக உதவி மத்தியஸ்தர் கொடியை உயர்த்திக் காட்டினார். இதனை அடுத்து வீடியோ மத்தியஸ்தரின் உதவியை நாடிய கள மத்தியஸ்தர் அண்ட்ரெஸ் குன்ஹா அந்த கோலை நிராகரித்து ஸ்பெய்னுக்கு ப்றீ கிக் கொடுத்தார். 

இதனைத் தொடர்ந்து 70 ஆவது நிமிடத்தில் சேர்ஜியோ ரமோஸ், ஜெரார்ட் பிக்கே, டியகோ கொஸ்டா ஆகிய மூவரினதும் அடுத்தடுத்த முயற்சிகள் ஈரான் பின்கள வீரர்கள் மற்றும் கோல்காப்பாளரால் தடுக்கப்பட்டன.

ஆனால் அதன் பின்னர் கடைசி நிமிடம்வரை கோல் நிலையை சமப்படுத்துவதற்கு ஈரான் கடுமையாக முயற்சித்தது. ஆனால் அது கைகூடாமல் போக ஸ்பெய்ன் வீரர்கள் ஆனந்தத்தில் மிதக்க, ஈரான் வீரர்கள் சோகத்தில் வீழ்ந்தனர்.

இந்த வெற்றியுடன் குழு பியிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஸ்பெய்ன் அதிகரித்துக்கொண்டுள்ளது.

அணிகள் நிலை - குழு “பி ”

நாடு வி.போட்டி   வெற்றி  சமநிலை  தோல்வி புள்ளிகள்  

ஸ்பெய்ன்                2            1          1             0            4               

போர்த்துக்கல்        2            1          1             0            4               

ஈரான்                2            1          0             1            3               

மொரோக்கோ                2            0          0             2            0               

 (என்.வீ.ஏ.)