இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸின் உபகுழு ஆராய்ந்துள்ளது.

உலகலாவிய ஆரோக்கியம் உலகலாவிய மனித உரிமைகள்,மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் குழுவே இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இந்த அமர்விற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ்ஸ்மித் தலைமைதாங்கியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் ஒன்பது வருடங்களிற்கு முன்னர் முடிவிற்கு வந்தது, 25 வருட யுத்தம் காரணமாக 100,000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்,பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர் என ஸமித் தனது ஆரம்ப உரையில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத யுத்தகுற்றத்தில் ஈடுபட்டன என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பலரிற்கு இன்னமும் நீதி என்பது கண்ணிற்கு தென்படாத விடயமாகவே உள்ளது எனவும் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவின் சீர்திருத்த அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும்,நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என பலர் கருதிய போதிலும் சிறிசேன போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள சுமத்தப்பட்டுள்ளன எனவும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இனநல்லிணக்கத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் சமூகங்கள் மத்தியில் பிணைப்பை அதிகரிக்க ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை,இரு சமூகங்கள் மத்தியிலான அரசியல் துருவமயப்படுத்தல் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்த புரிய துணிச்சலான உலகம் தற்போது நெருக்கடியில் உள்ளது,ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என பத்திரிகையாளர் ஜேஎஸ் திசநாயகம் தெரிவித்துள்ளார்.

2015 இல் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய விசேட நீதிமன்றம் குறித்து  விசேடமாக குறிப்பிடப்பட்டது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரச்சார இயக்குநர் ஜோன் சிவ்டன் போதிய முன்னேற்றமின்மை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.