மதுரையில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் வைத்தியசாலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘நாட்டின் தலைசிறந்த வைத்தியசாலையாகக் கருதப்படும் எய்ம்ஸ் வைத்தியசாலை ஐந்து மாநிலங்களில் அமையவிருப்பதாக பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் எய்ம்ஸ் வைத்தியசாலை அமைக்க இடங்கள் தேர்வு செய்வது குறித்து மத்திய குழுவினர் மதுரை, செங்கிப்பட்டி, பெருந்துறை, செங்கல்பட்டு, புதுகோட்டை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் மதுரையில் எய்ம்ஸ் வைத்தியசாலையை அமைக்க ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் வைத்தியசாலை அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைத்தியசாலையில் 750 படுக்கைகளுடன் கூடிய வைத்தியசாலையும், 100 வைத்திய கற்கைநெறிகளையும், அறுபது தாதியர் பயிற்சி கற்கைநெறிகளை கற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த வைத்தியசாலை 1500 கோடி ரூபாய் செலவில், 200 ஏக்கர் காணி பரப்பளவில் அமைக்கப்படவிருக்கிறது. இந்த வைத்தியசாலை அமைப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்.’ என்றார்.

இதனிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.‘ மதுரையில் எய்ம்ஸ் வைத்தியசாலை அமையவேண்டும் என்ற எங்களது முயற்சி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வைத்தியசாலை அமைந்தால் பதிமூன்று மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள். இந்த வைத்தியசாலைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும். அந்த விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும்.’ என்று தெரிவித்தார்.