சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளிடமிருந்து குழந்தைகளை பலவந்தமாக பெற்றோரிடமிருந்து பிரித்து அவர்களை காப்பகங்களில் அடைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் செயற்பாட்டை எண்ணி தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அமெரிக்க எல்லைவழியாக சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெனால்ட் ட்ரம்ப், அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லை வழியாக வரும் அகதிகளை கைதுசெய்து, அவர்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து குழந்தை காப்பகங்களில் வைப்பதற்கும் உத்தரவிட்டிருந்தார். 

இவரது இந்த உத்தரவுக்கு அவரின் மனைவி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ புஷின் மனைவி உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பான செய்தியொன்று அமெரிக்காவின் எம்.எஸ்.என்.பி.சி. தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது, இந்த செய்தியை ரச்செல் மேடோ வாசித்துக் கொண்டிருந்தார். 

அப்போது அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறும் மக்கள் சிறைகளிலும் அவர்களின் குழந்தைதகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டும் காட்சியை பார்க்கும்போதும் குழந்தைகள் கண்ணீர் விட்டு அழும்போதும் மனம் வேதனையடைகிறது என்று கூறிக் கொண்டே கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார் ரச்செல்.

இருப்பினும் தனது அழுகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தும் அந்த முயற்சி பயனளிக்காத காரணத்தினால் வேறு வழியின்றி நேயர்களிடம் மன்னிப்பு கேட்டு வெளியேறினார். 

கடந்த மே மாதம் 5 ஆம் திகதி முதல் ஜூன் 9 ஆம் திகதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2342 குழந்தைகள் தனி காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் சர்வதேச ரீதியில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு எதிரகா எழுந்த பலத்த எதிர்ப்புகளுக்கும் அழுத்தங்களுக்கும் இணங்க ட்ரம்ப், அகதிகளை கைதுசெய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.  

ஆனால் டிரம்பின் இந்த புதிய உத்தரவானது எப்போது அமுலுக்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை.