உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டாவது சுற்றில் விளையாடுவதற்கு முதலாவது அணிகளாக ரஷ்யாவும் உருகுவேயும் தகுதிபெற்றுள்ளன. அதேவேளை, இக் குழுவில் இடம்பெறும் எகிப்து, சவூதி அரேபியா ஆகிய அணிகள் முதலாம் சுற்றுடன் வெளியேறுகின்றன.

சவூதி அரேபியாவுக்கு எதிராக ரொஸ்டோவ் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற ஏ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றதை அடுத்து இக் குழுவில் இடம்பெற்ற அணிகளின் நிலைப்பாடுகள் தெரியவந்துள்ளது.

பார்சிலோனா கழகத்தின் முன்கள வீரர் லூயிஸ் சுவாரெஸ் இப் போட்டியின் 23ஆவது நிமிடத்தில் போட்ட கோல் உருகுவேயின் வெற்றிகோலாக அமைந்தது.

அத்துடன் இந்த கோலின் மூலம் மூன்று உலகக் கிண்ண அத்தியாயங்களில் கோல் போட்ட முதலாவது உருகுவே வீரர் என்ற பெருமையை சுவாரெஸ் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியில் பலம் குன்றிய சவூதி அரேபியாவுடனான போட்டியில் உருகுவே வெற்றிபெற்ற போதிலும் அதன் முழுமையான ஆற்றல் வெளிப்படாததுடன் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாகவும் அதன் வெற்றி இறுக்கமானதாகவே அமைந்தது.

கிட்டத்தட்ட 30 பாகை செல்சியஸ் உஷ்ணத்துக்கு மத்தியில் விளையாடப்பட்ட போட்டியில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன் களைப்புற்றவர்களாகவும் காணப்பட்டனர்.

ஆரம்பப் போட்டியில் சவூதி அரேபியாவை 5 க்கு 0 என ரஷ்யா துவம்சம் செய்ததை அடுத்து உருகுவேயும் இலகுவாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுக்கமான வெற்றிக்கு மத்தியில் உருகுவேயின் திறமை வெளிப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை பி குழுவில் இடம்பெறும் மொரோக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. 

(என்.வீ.ஏ.)