மொரோக்கோவுக்கு எதிராக மொஸ்கோ, லுஸ்னி விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற பி குழுவுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் ஆரம்பத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் போர்த்துக்கல் வெற்றிபெற்றது.

ஸ்பெய்னுடான முதலாவது போட்டியை வெற்றி தோல்யின்றி முடித்துக்கொண்டதால் நெருக்கடியை எதிர்கொண்ட போர்த்துக்கல் இப் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் மொரோக்கோவை எதிர்கொண்டது.

போட்டியின் 4ஆவது நிமிடத்தில் போர்த்துக்கலுக்கு கிடைத்த கோர்ணர் கிக் மூலம் பேர்னார்டோ சில்வா உயர்த்தி உதைத்த பந்தை தனது தலையால் தட்டிய க்றிஸ்டியானோ ரொனால்டோ மிக அலாதியான கோல் ஒன்றைப் போட்டு அணிக்கு தெம்பூட்டினார்.

அந்த ஒரு கோலே போர்த்துக்கலின் வெற்றி கோலாகவும் இறுதியில் அமைந்தது.

போட்டியின் ஆரம்பத்தில் போடப்பட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்த போர்த்துக்கல், கோல் எண்ணிக்கையை உயர்த்த கடுமையாக முயற்சித்தது. மறுபுறத்தில் கோல் நிலையை சமப்படுத்தும் கடும் முயற்சியில் மொரோக்கோ இறங்கியது.

இதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் போர்த்துக்கலின் சகல வீரர்களும் தடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் மொரோக்கோ வீரர்கள்  கோல் போட எடுத்துக்கொண்ட சில முயற்சிகளை கோல்காப்பாளர் ரூய் பெட்ரிசியோ மிக சாதுரியமாக தடுத்தமை போர்த்துக்கலின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தது

போட்டியின் கடைசிக் கட்டத்தில் ஆக்ரோஷத்துடன் எதிர்தாடும் வியூகங்களை அமைத்து மொரோக்கோ விளையாடியபோது க்றிஸ்டியானோ ரொனால்டோவும் தனது கொல் எல்லையில் நிலைகொண்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் கட்டாய வெற்றிக்காக போர்த்துக்கல் எந்தளவு தடுத்தாடும் உத்தியைக் கையாண்டது என்பது தெளிவானது.

இப் போட்டியில் கோல் போட்ட க்றிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு உலகக் கிண்ணப் போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை நான்காக உயர்த்திக்கொண்டார். அத்துடன் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை 85ஆக உயர்த்திக்கொண்டார்.

இதன் மூலம் சர்வதேச அரங்கில் அதிக கோல்களைப் போட்ட ஐரொப்பியர் என்ற சாதனைக்கு ரொனால்டோ சொந்தக்காரரானார். 

(என்.வீ.ஏ.).