(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா விலகியதனால் இலங்கைக்கு சாதகமான நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை இரண்டு பிரேரணைகளை கொண்டுவந்திருந்தது. அதில் முதலாவது பிரேரணைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு ஆதரவளித்தது. 

எனினும் நாங்கள் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் செயற்படாதமையால் இலங்கைக்கு எதிராக இரு குற்றப்பத்திரங்கள் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அமெரிக்கா கொண்டு வந்தது. 

இதனால் நாங்கள் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந் நிலையில் அமெரிக்கா ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து விலகியதன் காரணமாக  எங்களுக்கு இருந்தவந்த அழுத்தங்கள் பாரியளவில் குறைவடையும் வாய்ப்புகள் உள்ளது என்றார்.